ETV Bharat / state

உயிரைக் குடிக்கும் குடிநீர்.. தாகம் தீர்க்குமா தமிழ்நாடு அரசு!

author img

By

Published : Jun 23, 2020, 1:40 PM IST

கடந்த நான்கு வருடங்களில் அடுத்தடுத்து சிறுநீரக பிரச்னையில் ஒவ்வொருவராக உயிரிழக்கத் தொடங்கினார்கள். ஒரு சிறிய கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தைக் கிளப்பியது. ஏன் இந்த உயிரிழப்புகள்....

குடிநீர் பிரச்னை
குடிநீர் பிரச்னை

பேருந்து வசதி இல்லாததைக்கூட நாங்கள் சமாளித்துவிட்டோம். ஆனால், சுகாதாரமான குடிநீர் இல்லாமல் வாழமுடியவில்லை என உடைந்த குரலில் பேசத் தொடங்குகிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம், வாகைப்பட்டி கிராமவாசிகள்.

இந்தக் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு தண்ணீர் தொட்டி, குடிநீருக்கான இணைப்புக் குழாய்கள் போன்றவை இருந்தும் சுத்தமான குடிநீருக்குத்தான் வழியில்லை.

சுகாதாரமில்லாத தண்ணீரால் இந்தக் கிராமத்தில் பலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தாகம் தணிக்க அருந்திய ஒரு குவளை நீரா? உயிரைக் குடித்தது என்றால், ஆமாம் அதுவேதான் என கண்ணீரோடு பதிலளிக்கிறார்கள் அக்கிராமத்தினர்.

வாகைப்பட்டி பெண்கள்
வாகைப்பட்டி பெண்கள்

பல வருடங்களுக்கு முன்னர் குளம்தான் இந்தக் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்துவந்தது. அதன்பின்னர், கடந்த 15 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு மூலமாக எடுக்கப்படும் நீரை தொட்டியில் சேமித்து பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களில் அடுத்தடுத்து சிறுநீரக பிரச்னையால் ஒவ்வொருவராக உயிரிழக்கத் தொடங்கினர்.

ஒரு சிறிய கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தைக் கிளப்பியது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினோம்.

என் கணவருக்காக எத்தனையோ மருத்துவமனைகளுக்கு அலைந்தேன்... ஆனாலும் என கண்ணீரை அடக்கியபடி பேசுகிறார் சித்ரா, “என் கணவருக்கு சிறுநீரகப் பிரச்னை. கை, கால்கள் எல்லாம் வீங்கி அவர் அவதிப்பட்டதை என்னால் மறக்கவேமுடியவில்லை.

அவரைக் காப்பாற்ற மருத்துவர்களிடம் எவ்வளவோ கெஞ்சினேன். பெரிய பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லை. அவர் எங்களைப் பிரிந்துவிட்டார். இதற்கு மருத்துவர் சொன்னது ஒரே காரணம்தான், அது எங்கள் ஊர் தண்ணீர்” என்றார்.

தண்ணீரின்றி வெறுமையாக கிடக்கும் குடங்கள்
தண்ணீரின்றி வெறுமையாக கிடக்கும் குடங்கள்

தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் செல்லம்மாள், “எங்கள் ஊரில் இருக்கும் பிரச்னையில் முக்கியமானதே குடிநீர் பிரச்னைதான். இதனால்தான் என் கணவர், மகன், கணவரின் தம்பி ஆகியோருக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது.

இப்போது அவர்களை இழந்துவிட்டேன். இனியும் யாரையும் இழக்க திராணியில்லை. அரசுதான் இந்த பிரச்னையை கவனமெடுத்து எங்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும்” என்றார்.

மருத்துவ செலவிற்காக வாங்கிய கடன்கள் தலைக்குமேல் இருக்கிறது. கூலி வேலை செய்து பிழைக்கும் இவர்களுக்கு காசு கொடுத்து தண்ணீரை வாங்குவதென்பது இயலாத காரியம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

பேருந்துவசதி கூட வேண்டாம்...குடிநீர் தாருங்கள்: வாகைப்பட்டியினரை வதைக்கும் குடிநீர் பிரச்னை

சுமாராக 20-க்கும் மேற்பட்ட ஆண்கள், ஒரு பெண் என தொடரும் உயிரிழப்புகள் வாகைப்பட்டியை மயானமாக மாற்றிவருகிறது. சுத்தமான குடிநீரை வழங்க அக்கிராம ஊராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தொடர்பு கொண்டு கேட்டபோது, “இதுபோன்ற விஷயம் எதுவும் அந்தக் கிராமத்தில் இல்லை. அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது” என்று அலட்சியமாக தொடர்பை துண்டித்துவிட்டனர்.

அடுத்தடுத்து ஆண்கள் உயிரிழப்பது எதனால்? தண்ணீர்தான் பிரச்னை என்றால் பெண்கள் எப்படி அதனை சமாளிக்கிறார்கள் என அடுக்கடுக்கான கேள்விகள் நம் முன் விரிந்துகிடக்கின்றன. ஆனால் உரிய பதிலுக்கு அரசுதான் வழிவகை செய்யவேண்டும்.

வாகைப்பட்டியினரின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு

இந்தக் கிராமத்திலிருக்கும் குடிநீரை பரிசோதிக்கவேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும், இல்லையெனில் குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரமாவது அமைத்துக் கொடுக்கவேண்டும். இந்த நடவடிக்கை மட்டுமே வாகைப்பட்டி கிராம மக்களின் சந்ததியினரை தழைத்தோங்க செய்யும்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் அசுத்தமான நீரைப் பருகி வரும் கிராமவாசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.