ETV Bharat / state

’பேருதான் பாதாள சாக்கடை... கழிவுநீர் எல்லாம் ஊருக்குள்ள’ : புதுக்கோட்டையில் தொடரும் அவலம்!

author img

By

Published : Oct 21, 2020, 4:56 PM IST

Updated : Oct 24, 2020, 1:33 PM IST

sewerage project
sewerage project

ரூ. 13 கோடி பட்ஜெட்டில் பாதாள சாக்கடை கட்டப்பட்டும் கழிவுநீர் வாய்க்கால் போல புரண்டு ஓடுவது புதுக்கோட்டை நகர் பகுதிகளில் வாடிக்கையாகி வருகிறது. இதனால் 38 வார்டுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று ’பாதாள சாக்கடை’. கழிவுகளை அகற்றுவதில் மன்னர் காலத்திலேயே வாய்க்கால் பாதாள சாக்கடை வசதிகளை ஏற்படுத்திய மாவட்டம், புதுக்கோட்டை.

இன்று வரையிலும் எவ்விதக் குறைபாடும் இன்றி சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது எந்த மாவட்டங்களிலும் இல்லாத தனிச்சிறப்பு. கடந்த 2014ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓரிரு வருடங்களில் விறுவிறுப்பாக மாவட்டத்தில் உள்ள 42 வார்டுகளில் 38 வார்டுகளுக்கும் சுமார் 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது.

மாவட்ட நகராட்சியால் ஒவ்வொரு வீட்டிற்கும் பாதாளசாக்கடை இணைப்பிற்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் வசூல் செய்யப்பட்டது. அந்த பணம் நிர்பந்தத்தின் பேரில்தான் வசூலிக்கப்பட்டது.

இப்படி கட்டாயமாக வசூலித்து கட்டப்பட்ட பாதாள சாக்கடை, அமைத்த ஒரு சில மாதங்களிலேயே கோளாறானது. புதிய பாதாள சாக்கடையில் இருந்து கால்வாய் நீர் சாலைகளில் வழிந்தோடத் தொடங்கி விட்டது.

சாதாரண காலங்களில் கூட சாக்கடை நீரைக் கடந்து விடலாம். ஆனால் மழைக்காலங்களில் சொல்லவா வேண்டும்? வீசும் துர்நாற்றம், கொசுக்களின் ரீங்காரம், அவ்வப்போது மூச்சுத் திணறல் என மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மாவட்டத்தின் 42 வார்டுகளுமே நகரின் மிகவும் முக்கியமான மைய பகுதியாக உள்ளது. ஒரு தெருவில் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வரை மக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாக கழிவுநீர் தேங்குவது பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பாக அமையும்.

பூங்கா நகர் என்ற பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை விளையாடுவதற்கு ஏற்றார்போல இருந்த மைதானங்கள் தற்போது கழிவுநீர் தேங்கி நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் மக்களை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் தொடரும் பாதாளசாக்கடை பிரச்னை

இத்தனை பிரச்னைகளுக்கு நடுவே மாவட்ட நகராட்சி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என இயல்பாகவே கேள்வி எழலாம். இந்த அவலம் குறித்து பலமுறை மாவட்ட நகராட்சி, ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே கள எதார்த்தம்.

பாதாள சாக்கடை நல்லது எனக் கூறி தங்களை சுகாதார சீர்கேட்டில் சிக்க வைத்துள்ளதாக அப்பகுதியினர் வேதனைத் தெரிவிக்கின்றனர். உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

பூங்கா நகர் மட்டுமல்ல; மாவட்டத்தின் மையப்பகுதியான பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற பாதாள சாக்கடை பிரச்னைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் மைதானங்களை பாதுகாக்காமல் கோடிக்கணக்கில் செலவு செய்து மீண்டும் யாருக்காக பூங்கா திறந்து வைக்கின்றனர் எனத் தெரியவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கரோனாவை விட கொடூரமான நோய் விரைவில் தங்களை தாக்கப் போகிறது என மனமுடைந்த குரலில் தெரிவிக்கும் பூங்கா நகர் பகுதியினரின் கூக்குரலை மாவட்ட நிர்வாகம் இனியாவது கேட்டுத்தான் ஆகவேண்டும். மக்கள் குரலை மறுதலிப்பது அறமல்லவே!

இதையும் படிங்க:பெரம்பலூரில் நடைபாதை இல்லாத சாலைகளால் விபத்து ஏற்படும் அபாயம்!

Last Updated :Oct 24, 2020, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.