ETV Bharat / state

புதுக்கோட்டை தீண்டாமை கொடுமைக்கு முடிவுகட்டிய ஆட்சியர் - முழு விபரம்!

author img

By

Published : Dec 27, 2022, 9:57 PM IST

Updated : Dec 28, 2022, 1:37 PM IST

Etv Bharat
Etv Bharat

புதுக்கோட்டை அருகே வேங்கை வயல் கிராமத்தில் மனித மலம் கலக்கப்பட்ட குடிநீரை பருகிய பொதுமக்கள் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபத்தை எடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அக்கிராமத்தில் முகாமிட்டு பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். இருப்பினும், தங்களுக்கு இது நிலைக்குமா இல்லையா? என பொதுமக்கள் கூறிய கருத்துகளைக் காணலாம்.

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் (Iraiyur, Vengai vayal village) அசுத்தமான குடிநீரைப் பருகியதால் ஏற்பட்ட உடல் உபாதைகளால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த கிராமத்தில் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதை அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இன்று (டிச.27) வேங்கை வயல் கிராமத்தில் முகாமிட்டு அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதன் ஒருபகுதியாக, அங்கு டீக்கடைகள், கோயில்கள், ஊர் பொது இடங்கள் உள்ளிட்டப் பகுதிகளில் 'இரட்டைக்குவளை முறை'யையும், 'தீண்டாமை'யையும் (Untouchability) கடைப்பிடிப்பதாக, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தங்கள் கிராமத்திலுள்ள குடிநீர் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் இவ்வாறு மனித மலம் கலக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது என வருத்தத்துடன் அவர்கள் தெரிவித்தனர். மேலும், தங்களுக்கு இந்த கிராமத்தில் எந்தவிதமான வசதிகளும் கிடையாது என்றும்; எனவே, மாவட்ட ஆட்சியர் இதற்கு இத்தகைய மனிதாபிமானமற்ற தீண்டாமை உள்ளிட்ட செயல்பாடுகளை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, தங்களுக்கு கோயில்களிலும் வழிபாட்டிற்காகக் கூட அனுமதிப்பதில்லை என்று வேதனைத் தெரிவித்தனர்.

இவற்றையெல்லாம் கேட்டபின், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சம்பந்தப்பட்ட பட்டியல் இன மக்களை அந்த கிராமத்திலுள்ள அய்யனார் கோயிலுக்குள் வருவாய்த்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரின் பலத்த போலீசாரின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார்.

இதனிடையே, கோயிலுக்குள் நின்று கொண்டிருந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்தப் பெண் ஒருவர் அருள் வந்து பேசுவதுபோல், கோயிலுக்குள் நுழைந்த பட்டியல் இன மக்களை தகாத வார்த்தைகளால் பேசி, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திட்டுகிறார். இந்நிகழ்வு, பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி தற்காலிமானது என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய பொதுமக்களுள் ஒருவரான சிந்துஜா கூறுகையில், 'நாங்கள் 3 தலைமுறைகளாக இக்கிராமத்தில் வசித்தபோதும், முதல் முறையாக இப்போதுதான் இந்த அய்யனார் கோயிலுக்குள் வந்துள்ளோம். எங்கள் ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு, நாங்கள் கோயிலுக்குள் நுழைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

டிகிரி வரைப் படித்து அரசு வேலைக்கு சென்றால் கூட இத்தகைய சம்பவங்கள் இன்னும் ஒழிந்தபாடில்லை. இன்று அரசு அதிகாரிகள், போலீசார் எனப் பலர் இங்கு வந்து கோயிலுக்குள் நுழைய வைத்தாலும் இது நீடிக்குமா என்பது கேள்விதான்' என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

'எனக்கு கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆகிருச்சு. இப்போ தான் இந்த கோயிலுக்குள் வந்திருக்கேன். இருப்பினும், வந்த சந்தோஷம் கொஞ்ச நேரத்திலேயே போயிடுச்சு' என வருந்துகிறார், அதே கிராமத்தைச் சேர்ந்த லதா. மேலும் அவர், ’3 ஆண்டுகளுக்கு முன்பு திருமண தம்பதிகளாக இங்கு வந்தபோது, தங்களை ரோட்டில் நின்று வழிபட்டு மண்ணை எடுத்துக்கொள்ள சொன்னதாகவும், தற்போது மாவட்ட ஆட்சியர் கொண்டு வந்த மாற்றம் கூட நிலைக்குமா என தெரியவில்லை' என்றும் தெரிவித்தார்.

'தங்களின் ஊரில் வரும் குடிநீரை கடந்த ஒரு வருடமாக குடித்து வந்தநிலையில், உடல் உபாதைகளால் பாதிப்புகள் ஏற்படவே நீரைக் காய்ச்சி குடித்து வந்தோம். இதனிடையே சமீபத்தில்தான் அடையாளம் தெரியாத சில சமூக விரோதிகள் குடிநீரில் மனித மலத்தைக் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது’ எனக் கூறினார், முத்துலட்சுமி. மேலும், அரசு அதிகாரிகள் நடந்தவற்றை உறுதிப்படுத்திய பின்னர், தங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்வதாக தெரிவித்துள்ளதாக முத்துலட்சுமி கூறினார்.

மேலும் அவர், ’தங்களது பகுதியில் போதிய சாலை வசதி அமைக்கவும், தண்ணீருக்கு நடுவே சடலத்தை தூக்கிச் செல்கிற அவலத்தை நீக்க மயானத்திற்கு பாதை அமைக்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தற்போது மனு அளித்துள்ளோம். அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீடு திரும்பிய நிலையில், ஒரு குழந்தை மட்டும் சிகிச்சையில் உள்ளது. தவிர, ஊரில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் அனைவருக்கும் போதிய சிகிச்சை அளிக்கப்பட்டது' என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன், 'தனக்கு 34 வயது ஆகிறது. இதுவரையில் ஊர்க் கோயிலான அய்யனார் கோயிலில் கலெக்டர், எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் நுழைந்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர். அதற்குள், அருள் வந்து சாமியாடிய பெண்ணொருவர் அத்தனை அரசு அதிகாரிகள் முன்னிலையிலும் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் மன வருத்தம் அளித்தது. இந்த விவகாரத்தில் அரசு தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்' என்றார்.

இது தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரை வலைவீசித் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாறிவரும் அறிவியல் யுகத்தின் நடுவே, நமது நாடு பல முன்னேற்றப் பாதைகளை நோக்கி செல்லவேண்டிய நிலையில், இத்தகைய அர்த்தமற்ற தீண்டாமை போன்ற செயல்பாடுகள் இன்னும் ஒழியவில்லை; நாட்டின் எங்கோ ஓர் பகுதியில் இன்னும் இவை போன்ற கொடுமைகள் நடந்துகொண்டே தான் உள்ளன என்பதை இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் நடந்த சம்பவம் பகிரங்கமாக அரசுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

இவற்றை ஒழிக்க, நமது அரசு மட்டும் அல்லாது, ஒட்டு மொத்தமாக அனைத்து சமூக மக்களும் இணைந்தே சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டும். இவற்றை நமது ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

இதையும் படிங்க: தீண்டாமை: கோயிலை திறக்க கட்டளையிட்ட கலெக்டர்; சாமி தரிசனம் செய்த பட்டியலின மக்கள்

Last Updated :Dec 28, 2022, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.