ETV Bharat / state

தச்சங்குறிச்சியில் துவங்கியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 12:21 PM IST

Updated : Jan 6, 2024, 1:33 PM IST

Pudukkottai Jallikattu
புதுக்கோட்டையில் துவங்கியது 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி

Pudukkottai Jallikattu: தமிழகத்தின் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் துவங்கியது.

புதுக்கோட்டையில் துவங்கியது 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை: தமிழர்களின் சிறப்பாக கருதப்படும் தைப்பொங்கல் தினத்தன்று நடத்தப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் இன்று (ஜன.06) கோலாகலமாகத் தொடங்கியது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்கு வாகனங்கள் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளது.

மேலும், போட்டியில் காயமடைபவர்களை தீவிர சிகிச்சைக்கு அருகிலுள்ள கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, காளைகளுக்கு எந்த ஒரு காயங்கள் ஏற்பட்டாலும், கால்நடை மருத்துவ முகாம்களும் போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, பாதுகாப்புப் பணியில் தீயணைப்பு மீட்புக் குழுவினர் மற்றும் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னதுரை, திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும், இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு களமாடுகின்றனர். முன்னதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அமைச்சர் ரகுபதி உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, போட்டி ஆரம்பமானது.

வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ரொக்கப் பரிசு உள்ளிட்ட பரிசுகளும், போட்டியின் நிறைவாக சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரருக்கும் பல்சர் பைக் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், "தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது. தமிழகத்திலேயே அதிகமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில், இந்த ஆண்டில் முதல் ஜல்லிக்கட்டு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வீரத்தினை நிலைநாட்டும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் அனுமதி அளித்தார். அதேபோல், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார்.

மாவட்ட நிர்வாகம் சார்பாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில், ஆன்லைன் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் முறை செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 15 லட்சம் வசூல்!

Last Updated :Jan 6, 2024, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.