ETV Bharat / state

அட்டகாசம் செய்த சிறுத்தை - பழங்குடி இனத்தை சேர்ந்த வனக்காப்பாளர்கள் தீவிர தேடுதல் வேட்டை

author img

By

Published : Feb 12, 2023, 10:49 PM IST

Etv Bharat
Etv Bharat

இருக்கூரில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்த வனக்காப்பாளர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சுடையாம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சிறுத்தை புகுந்தது. இச்சிறுத்தை அங்குள்ள ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதனிடையே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் இரு இடங்களில் கூண்டு மற்றும் 10 தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உத்தரவின்பேரில் வனச்சரகர், வனவர் என 46 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, சிறுத்தை, புலி போன்ற ஆட்கொல்லி வன விலங்குகளை கண்டறியும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வனக் காப்பாளர்கள் மீன்காலன், பொம்மன் ஆகிய இருவர் இருக்கூர் கிராமத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இருவரும் வனத்துறையினருடன் சேர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் சிறுத்தையின் கால் தடம், வேட்டையாடிய கால்நடைகளின் பாகங்கள் கண்டறியப்பட்ட இடம், கரும்பு காடு, புதர்கள், மரங்களின் கிளைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்காலன், பொம்மன் ஆகிய இரு வனக்காப்பாளர்களும் முதுமலை மசினக்குடியில், கடந்த ஆண்டு நான்கு பேரை கொன்ற, 'டி-23' என்ற ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடித்ததற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் விருது வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “இருக்கூர் பகுதியில் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை விரைவில் பிடித்து விடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நின்ற நிலையில் பெண் யானை உயிரிழப்பு.. கோவை வனத்துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.