ETV Bharat / state

நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

author img

By

Published : Dec 12, 2022, 10:47 PM IST

Etv Bharat
Etv Bharat

தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான நிலத்தை குத்தகை அடிப்படையில் வைத்திருப்போருக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நான்கு வழி சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

நான்கு வழி சாலை அமைக்க எதிர்ப்பு

மயிலாடுதுறை: விழுப்புரம் முதல் நாகை வரை 180 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த நான்கு வழிச்சாலை கொள்ளிடத்தில் தொடங்கி தரங்கம்பாடி வரை 44.5 கிலோமீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்படுகிறது.

தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை டெல்லியைச் சேர்ந்த வில்ஸ்பன் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் திருக்கடையூர் அம்புபோடும் சாலையில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் இன்று சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. மயிலாடுதுறை எஸ்பி.நிஷா தலைமையில் டிஎஸ்பிக்கள் சீர்காழி லாமேக், மயிலாடுதுறை வசந்த ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் குத்தகை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை விட்டு நிலங்களை மட்டும் தற்போது கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான நிலத்தை குத்தகை அடிப்படையில் வைத்திருப்போருக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நான்கு வழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் சிம்சன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 9 நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 100 நாள் வேலைக்குச் சென்ற பெண்களை போராட்டம் செய்யப் போகிறார்கள் என்று நினைத்து காவல் துறையின் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் தரையில் உருண்டு கூறிய பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டது. வேலைக்குக் கூட செல்ல விடாமல் போலீசார் தடுத்து வைத்துள்ளதாகவும் உரிய இழப்பீடு மற்றும் தங்களுக்கு வீடு வழங்கினால் தாங்கள் இடத்தை காலி செய்து விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு எண்ணை கொடுத்தால் உடனடியாக அவர்களுக்கு உண்டான இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என்றும்; ஆகாஷ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை பொதுமக்கள் ஏற்கவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: மனிதர்களை பாகுபடுத்தும் கருத்துகள் கொண்டது சனாதனம் - திருமாவளவன் எம்.பி. பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.