ETV Bharat / state

GPS device: ஜிபிஎஸ் கருவி மூலம் சிக்கிய பைக் திருடர்கள் - 4 இருசக்கர வாகனங்கள் மீட்பு

author img

By

Published : Jan 3, 2022, 9:48 PM IST

இருசக்கர வாகனங்கள் மீட்பு
இருசக்கர வாகனங்கள் மீட்பு

GPS device: நாகப்பட்டினத்தில் ஜிபிஎஸ் கருவி மூலம் வைக்கப்பட்டிருந்த குடோனில் 4 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட கோழி, ஆடுகளும் சிக்கின.

GPS device: நாகப்பட்டினம் நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள், கால்நடைகள் திருட்டு போய் வருவது தொடர்பாகப் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக நாகைப் பகுதிகளில் இரவு நேரங்களில் கால்நடைகள் அதிக அளவில் திருடப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் நாகையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கும்பல் ஒன்று ஜி.பி.எஸ் கருவி மூலம் சிக்கி இருக்கிறது.

ஜிபிஎஸ் கருவி மூலம் சிக்கிய பைக் திருடர்கள்
ஜிபிஎஸ் கருவி மூலம் சிக்கிய பைக் திருடர்கள்

நாகை அடுத்த வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பல்மருத்துவர் பழனிவேல், பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த தனது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்து இருந்தார்.

காணாமல் போன அவருடைய இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட நிலையில், இருசக்கர வாகனம் நாகை நாடார் தெருவில் இருப்பதாக ஜி.பி.எஸ் கருவியை ட்ராக் செய்யும்போது காட்டியுள்ளது.

அதனைத்தொடர்ந்து மருத்துவர் பழனிவேலுவின் நண்பர் நாடார் தெருவிற்குச் சென்று வெளிப்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

ஜிபிஎஸ் கருவி மூலம் சிக்கிய பைக் திருடர்கள்

திருடப்பட்ட கோழிக்குஞ்சுகளும் பறிமுதல்

உடனடியாக அங்கு சென்ற வெளிப்பாளையம் காவல் துறையினர் ஜிபிஎஸ் லொகேஷனைப் பார்த்தபோது இருசக்கர வாகனம் அங்கிருந்த தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் குடோனில் நிற்பது தெரியவந்தது. பின்னர் குடோனை திறந்து காவல் துறையினர் பார்த்தபோது உள்ளே 4 இருசக்கர வாகனங்கள் நிற்பதைக் கண்டறிந்தனர்.

அத்தோடு, உள்ளூரில் திருடப்பட்ட 8 கோழிக்குஞ்சுகள், 4 ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் அங்கு கட்டப்பட்டு இருந்ததும் தெரிய வந்துது.

அதன் பின் இதுகுறித்து நடத்திய விசாரணையில், இரண்டு இளைஞர்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.

வெளிப்பாளையம் நாடார் தெருவில் மினரல் வாட்டர் கேன் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்துவரும் ரமணா என்பவரிடம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தர்மன், ஜான்சன் ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் நாகையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளையும் திருடி விற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜி.பி.எஸ் கருவி மூலம் வசமாக சிக்கியுள்ள தர்மன், ஜான்சன் ஆகிய இருவரையும் பிடித்துள்ள வெளிப் பாளையம் காவல்துறையினர் கிடப்பில் கிடக்கும் பைக் உள்ளிட்ட திருட்டு புகார்கள் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

காணாமல் போன இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்ட குடோனில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டுள்ளதால், இருவரும் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களா? என்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 4 இருசக்கர வாகனங்களும் ஏற்கெனவே தேடி கண்டுபிடிக்க புகார் அளித்திருந்த நிலையில், செல்லூர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், கூடை முடைவோர் காலனியைச் சேர்ந்த பாலு உள்ளிட்ட வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகையில் திருட்டு கும்பல் ஜி.பி.எஸ். கருவி மூலம் காவல் துறையிடம் வசமாக சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மோடியே வருக! - வரவேற்க ஆவலுடன் திமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.