ETV Bharat / state

'மீனாட்சிய பார்க்க அழகர் வாராரு... மருதைக்கு வாங்க மக்களே...' - சித்திரைத் திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை!

author img

By

Published : Apr 20, 2023, 11:12 PM IST

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக அறியப்படும் மதுரை, இன்னும் ஒரு சில நாட்களில் உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவிற்குத் தயாராகிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், பட்டாபிஷேகம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையில் எழுந்தருளல், தசாவதாரம், பூப்பல்லக்கு என ஒட்டு மொத்த மாநகரமே விழாக்கோலம் பூணவுள்ள நிலையில், அதன் வரலாறு, பண்பாடு, சமூக நல்லிணக்கம் சார்ந்த ஆன்மிகம் ஆகியவை குறித்து அலசுகிறது, இந்த சிறப்புத் தொகுப்பு...

Etv Bharat
Etv Bharat

சித்திரைத் திருவிழா

மதுரை: நாகரிகச் சிறப்பு வாய்ந்த தொன்மைச் சமூகத்தில் விழாக்களும், பண்பாடு சார்ந்த நிகழ்வுகளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும்கூட ஓரிடத்தில் நிலையாக நின்று பல்வேறு வகையிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற உலகின் தலைசிறந்த வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட நகரங்களில் மதுரைக்கு இப்போதும் முதன்மைச்சிறப்பு உண்டு. மொழி, பண்பாடு மட்டுமன்றி மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மரபு வழி நம்பிக்கைகளும் நிறைந்த மாநகராக மதுரை இன்றளவும் திகழ்கிறது.

அந்த வகையில் எப்போதும் விழாக்களாலும், கொண்டாட்டங்களாலும் நிறைந்த ஊர் என்ற பொருளில் மதுரையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'விழாமலி மூதூர்' என்ற சொல்லின் மூலமாக சிறப்பிக்கிறார். ஆண்டின் அனைத்து மாதங்கள் மட்டுமன்றி, அனைத்து நாட்களிலும் விழாக்களால் திக்கு முக்காடிப் போவதை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி மற்றும் வெளி வீதிகளைச் சேர்ந்த மக்களிடம் கேட்டால் மிகுந்த பூரிப்போடு கதை கதையாய்ச் சொல்வார்கள்.

மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மீ. மருதுபாண்டியன் கூறுகையில், ''மதுரை மாநகர் என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது சித்திரைப் பெருந்திருவிழா. இவ்விழா குறித்த கல்வெட்டுச் செய்திகள் பல உள்ளன. தமிழில் உள்ள 27 நட்சத்திரங்களில் 14ஆவதாக குறிப்பிடப்படுவதே சித்திரை நட்சத்திரம். தமிழ் மாதங்களுள் ஒன்றாகவும் உள்ளது.

சித்திரை என்ற மாதம் குறித்த செய்தி முதன் முதலாக கி.பி.897-ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில்தான் இடம்பெற்றுள்ளது. சித்திரைத் திருவிழா என்ற பெயரோடு கூடிய கல்வெட்டும் கி.பி.920-லும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதியில் தொகுதி 21-இல் சித்திரைப் பெருந்திருவிழா என்ற குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. ஆக, சித்திரை மாதத்தில் கொண்டாடப்படக்கூடிய திருவிழாக்கள் குறித்து தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

அண்மையில் மூத்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 456-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுத்துள்ளனர். இதில் அச்சுதப்ப நாயக்கருடைய ஆட்சிக்காலத்தில் கி.பி.1530-இல் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா, வசந்தத் திருவிழா, ஆடித் திருவிழா, ஆவணித் திருவிழா என பல்வேறு விழாக்கள் சிறப்புடன் கொண்டாடப்படுவதற்கு பல்வேறு கொடைகளையும், பூஜைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கியதற்கான கல்வெட்டுச் சான்றும் கிடைத்துள்ளது.

அப்படியானால், அச்சுதப்ப நாயக்கரின் காலகட்டத்திலிருந்துதான் இந்த சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனாலும், கி.பி.1009களிலேயே சித்திரைத் திருவிழா நடைபெற்றது குறித்த கல்வெட்டுச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. மதுரையைப் பொறுத்தவரை சித்திரைத் திருவிழா என்பது மரபு வழிக் கதையாடலின் வழியே தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண்பதற்காக அழகர் மலையிலிருந்து புறப்பட்டு வரும் கள்ளழகர், தான் வருவதற்குள் திருமணம் நடைபெற்று முடிந்ததால், கோபித்துக் கொண்ட அவர், வைகையில் இறங்கி, அதன் கரையோரமாகவே தேனூர் மண்டபத்தைச் சென்றடைகிறார் என்பது வாய்மொழியாக மதுரை மக்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிவன், பார்வதிக்கு நடைபெற்ற திருமணத்தில் விஷ்ணுவும் அவரது மனைவியும் இருப்பதாகத்தான் நமக்குக் கிடைத்துள்ள ஐம்பொன் சிலைகளின் வாயிலாகத் தெரிகின்றன.

ஆனால், மக்களிடமுள்ள மரபு வழி செய்திகள் வேறானவை. ஆனால், அழகர்கோவிலிருந்து பெருமாள் கள்ளர் வேடமிட்டு, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ராஜ அலங்காரத்திற்குப் பிறகு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்கிறார். இரண்டாவதாக மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காகவும் அவர் மதுரை நோக்கி பயணப்படுகிறார். இதுதான் கள்ளழகர் திருவிழாவின் முக்கிய நிகழ்வு. இதுவே, பிற்பாடு புனையப்பட்டு வேறு மாதிரியாக கதையாக மாறியது.

மதுரை குறித்து விரிவான முறையில் ஆய்வு மேற்கொண்ட வரலாற்றறிஞர் அ.கி. பரந்தாமனார் நூலின் அடிப்படையில், கள்ளழகர் விழா மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்திலும், மீனாட்சி திருக்கல்யாணம் மதுரையிலும் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்றன என்றும்; குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியான இரண்டு பெருந்திருவிழாக்களை ஒன்றாக்கும் நோக்கில் திருமலை நாயக்கரின் காலகட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதே தற்போதுள்ள சித்திரைத் திருவிழா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள் இதுவரை நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. பேராசிரியர் தொ.பரமசிவம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளவாறு, இந்தத் திருவிழா பல்வேறு இனக்குழு மக்கள் ஒன்றாகச் சேர்ந்து சங்கமிக்கும் திருவிழா என்பதே உண்மை.

மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் பல்வேறு சாதிகளைச் சார்ந்த மக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து மதுரைக்கு வந்து தங்கி, இந்தத் திருவிழாவை கண்டு களித்துச் சென்றதெல்லாம் வரலாறு. பொதுமக்களிடையே ஒருமைப்பாட்டை கொண்டு வரும் நோக்கத்தில் நடைபெறும் முக்கியமான ஒரு சடங்காக நாம் இதனைப் பார்க்க வேண்டும்'' என்கிறார்.

சாதி, இனம், மொழி, மதம் கடந்து நடைபெறும் மதுரை சித்திரைத் திருவிழாவில் எல்லாத் தரப்பு மக்களும் கலந்து கொண்டு மதுரையின் பண்பாட்டு நிகழ்வாகவே பார்க்கின்றனர். ஆகையால், இதற்கு எந்தவிதத்திலும் எந்த சாயமும் பூச முடியாது என்பதே இந்த விழாவின் ஆகப்பெரும் பெற்றி என்கின்றனர், பல்வேறு சமூக ஆய்வாளர்கள்.

மதுரை திருவிழாக்களின் தலைநகரம் என்ற நூலின் ஆசிரியர் சித்திரைவீதிக்காரன் கூறுகையில், "திருவிழாக்களின் நகரம் என்று மதுரையைக் குறிப்பிட்டால், இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழாவை திருவிழாக்களின் திருவிழா என்றுதான் அழைக்க வேண்டும். இங்கு ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு விழா நடைபெற்ற வண்ணம் இருக்கும். இங்கு இந்து மதம் சார்ந்த பெருங்கோவில்கள் மட்டுமன்றி, தர்காக்கள், தேவாலயங்களும் நிறைந்திருப்பதுதான் மதுரை மாநகரின் பெருஞ்சிறப்பு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் 280 நாட்களுக்கும் மேலாக விழாக்கள் நடைபெறுவதாக கோவில் மலர் சொல்கிறது.

இவற்றில் சித்திரைத் திருவிழா, தெப்பத் திருவிழா மற்றும் புட்டுத் திருவிழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தேனூர் கிராமத்தின் வைகையாற்றில் இறங்கிக் கொண்டிருந்த கள்ளழகரை, மாசி மாதத்தில் மதுரையில் நடைபெற்ற திருக்கல்யாணத்தையும் ஒருங்கிணைத்து சித்திரை மாதம் ஒரே திருவிழாவாகக் கொண்டு வந்தவர், திருமலை நாயக்கர். ஆற்றின் ஒருபுறத்தில் நகர மக்களின் திருவிழாவாகவும், மறுபுறம் நாட்டார் மக்களின் திருவிழாவாகவும் நடைபெறுவதுதான் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம்.

தேரோட்டமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் பல லட்சம் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாக்களில் 8 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தென்னகத்தின் பெருவிழாவாக மட்டுமன்றி இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மீனாட்சி, தான் முடி சூடிய பிறகு திக் விஜயம் மேற்கொண்டு நகருக்குள் பவனி வருவது மிக முக்கியமான நிகழ்வாகும். பிற கோவில்களில் திருக்கல்யாணத் திருவிழாக்கள் நடைபெற்றாலும், மதுரையின் அரசியாக மீனாட்சியம்மன் 8ஆம் நாளில் முடிசூடி பாண்டியர்களின் சின்னமாக இருக்கக்கூடிய வேப்பம்பூ மாலையைத் சூடிக் கொண்டு உலா வருவது குறிப்பிடத்தகுந்த விசயமாகும்" என்கிறார்.

அடுத்த ஓரிரு நாட்களில் மதுரை மாநகர் முழுவதும் விழாக்கோலம் காணவுள்ள நிலையில், அழகரையும், மீனாட்சியின் திருக்கல்யாணத்தையும், தேரோட்டத்தையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதோடு, கள்ளழகரைப் போலவே தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு உபசரிப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் இந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சியின் எச்சம்.

இதையும் படிங்க: Viral - சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் அன்னபூரணி அரசு - அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சந்திரமுகி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.