ETV Bharat / state

“ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது?” - தமிழ்நாடு அரசு வாதம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 7:02 AM IST

Etv Bharat
Etv Bharat

RSS Rally: விஜயதசமி நாளன்று தென் மாவட்டங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கோரிய வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வருகிறது.

மதுரை: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) சங்கம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்கு உட்பட்ட 20 இடங்களில் வருகிற 22ஆம் தேதி விஜயதசமி நாளன்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி ஆர்எஸ்எஸ் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், “இந்திய சுதந்திரம் 75வது ஆண்டு கொண்டாடும் விதமாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விஜயதசமி (22-10-2023) நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையான காக்கி டவுசர், வெள்ளை சட்டை , தொப்பி, பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து, நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வலமாக சுற்றி வந்து, இறுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தும், இதுவரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல் கடந்த வருடம் பேரணி நடத்த அனுமதி வழங்கக் கோரி மனு அளித்தோம். காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், காவல் துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. பின்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெற்று, தமிழக முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வல பேரணி நடத்தினோம். எனவே இந்த வருடம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “ விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காக்கி டவுசர், வெள்ளை சட்டை மற்றும் தொப்பி அணிந்து கையில் பாரத மாதா கொடியுடன் ஊர்வலம் நடத்த இருக்கிறோம்.

இந்தியாவில் உள்ள அனைவரையும் சகோதரத்துவமாகத்தான் பார்க்கப்படுகிறோம். மேலும் ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதோ, எவ்வித அசம்பாவிதம் ஏற்படாது. ஊர்வலத்தின்போது ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவை பாரதம் என்று நாங்கள் சொல்கிறோமே தவிர, அகண்ட பாரதம் என்று எங்கும் பேசப்படவில்லை. இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசுத் தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர். தொடர்ந்து, “ஆர்எஸ்எஸ் தரப்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தென் தமிழகத்தில் 20 இடங்களில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுக்கள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த அனுமதி கடிதத்தில், எப்போது ஊர்வலம் நடத்தப்படும், எங்கு ஆரம்பிக்கப்படும், எங்கு முடிக்கப்படும், மேலும் அந்த ஊர்வலத்தின்போது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்களா மற்றும் ஊர்வலம் செல்லும் பாதைகளில் பிற மத வழிபாட்டுத் தளங்கள் இருக்கிறதா என்பது குறித்து எவ்வித முழுமையான தகவலும் இடம் பெறவில்லை.

மேலும் பல இடங்களில் ஆர்எஸ்எஸ் தரப்பில் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரத்தில், பிரிவினை குறித்தும் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. இது சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது எந்த சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது? சங்க அமைப்பா அல்லது அறக்கட்டளையா அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என்கிற எவ்வித தகவலும் இல்லை. ஊர்வலத்தின்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது?

தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தால், காவல்துறை பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே, தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி இளங்கோவன், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தின்போது ஒவ்வொரு மாவட்டங்களில் யார் பொறுப்பேற்பது, மேலும் ஊர்வலம் எங்கு ஆரம்பிக்கிறது மற்றும் எங்கு நிறைவு செய்யப்படுகிறது என்பது குறித்த முழு விபரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைய (அக்.17) தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வாச்சாத்தி வழக்கு: ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.