ETV Bharat / bharat

வாச்சாத்தி வழக்கு: ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 11:01 PM IST

Vachathi Case: வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐஎஃப்எஸ் (IFS)அதிகாரிகளான எல்.நாதன், பாலாஜி ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு
வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு

டெல்லி: நெடுநாள் போராட்டம், கண்ணீர், ஏக்கம் என ஒரு பகுதி மக்களின் உரிமையை மீட்டெடுத்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. கிராமம் சூறையாடப்பட்டு, கிராமப்பெண்கள் சிதைக்கப்பட்டனர். சேதங்களை சரி செய்து வாழ்ந்து விடுவார்களோ என்று எண்ணி, வாழ்வதற்கு நினைக்கக்கூட கூடாது என்ற வகையில், உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்தையும் நிறுத்தினர். வேலியே பயிரை மேய்ந்தது போல, இவை அனைத்து அப்பகுதி காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறைகளால் நிகழ்த்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில், சந்தன மரங்கல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்க சென்ற காவல்த்துறை வரம்பு மீறி அத்துமீறலில் ஈடுபட்டது. விசாரணைக்கு முன்பே குற்றத்தை நிரூபித்த காவல் துறை, அப்பகுதி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியது.

1992 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர் என காவல்த்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொடங்கப்பட்ட விசாரணை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு தருமபுரி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

2011 ஆம் ஆண்டு தருமபுரி சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறபிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மேல் முறையீடு வழக்கு மீண்டும் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மேல் முறையீட்டு மணுவை தள்ளுபடி செய்து, பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை அல்லது சுயத் தொழில் செய்ய உதவ வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் (IFS)அதிகாரிகளான எல். நாதன், பாலாஜி உள்ளிட்ட 19 பேர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று(அக்.16) விசாரணைக்கு வந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஆறு வாரங்களுக்குள் தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதான வழக்கு..! பாஜகவின் பங்கு உள்ளதாக வாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.