ETV Bharat / state

புவிசார் குறியீடு: சர்வதேச கவனம் பெறும் ராமநாதபுரம் 'முண்டு வத்தல்'

author img

By

Published : Feb 26, 2023, 8:56 PM IST

விவசாயி
Etv Bharat

ராமநாதபுரம் மண்ணில் விளையும் தனிச்சிறப்பு மிக்க 'முண்டு வத்தல்' மத்திய அரசின் புவி சார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றிருக்கின்ற காரணத்தால், இனி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும். இதன் காரணமாக முண்டு வத்தல் விவசாயிகள் அதிக பலன் பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை காணலாம்.

மதுரை: தமிழர்களின் உணவில் மிளகாய்க்கு மிக முக்கியப்பங்கு உண்டு. மிளகுக்கு மாற்றாக இந்தப் பயிர் இங்கு வந்ததால் அந்தப் பெயரின் அடிப்படையிலேயே மிளகாய் என அழைக்கப்பட்டது. மண் சார்ந்த பயிர் அல்ல. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த மிளகாய். அதற்கு முன்பு வரை சமையலுக்கு மிளகுதான் பயன்படுத்தப்பட்டது. மிளகு பாரம்பரியமான மண் சார்ந்த பயிர்.

பண்டைய தமிழ்நாட்டின் துறைமுகங்களிலிருந்து ரோம் வரை கூட கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியடு பெயரும், வளங்கெழு முசிறி' என பொன்னுக்கு மாற்றாக மிளகை யவனர்கள் பெற்றுச் சென்றதை அகநானூறு பாடியுள்ளது. ஆனால் மிளகாய், வெளிநாட்டுப் பயிர் என்றாலும்கூட கடந்த 400 ஆண்டுகளாக தமிழர்களின் உணவில் முக்கியப் பங்காற்றுகிறது. சம்பா வத்தல் என்றழைக்கப்படுகின்ற நீள வத்தல், முண்டு வத்தல் என்றழைக்கப்படும் குண்டு வத்தல் என மிளகாய் இரண்டு வகையாக இங்கு விளைவிக்கப்படுகிறது.

இதில், முண்டு வத்தல், ராமநாதபுரம் மண்ணுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க பயிராகும். கரிசல் மண்ணில் வளரும் முண்டு வத்தல் காரம் மிகுந்ததாகவும், சுவை கூடியதாகவும் உள்ளது. ஒரு கிலோ சம்பா வத்தலில் உள்ள காரம், அரை கிலோ முண்டு வத்தலில் கிடைக்கும். அதனால் நீள வத்தலைக் காட்டிலும் முண்டு வத்தல் சற்று விலை அதிகமும்கூட. சம்பா வத்தலைப் போன்று இதனை அரைத்துப் பொடி செய்து பயன்படுத்தாமல், சில பகுதிகளில் நேரடியாக சாம்பார் உள்ளிட்ட குழம்பில் காயாகவே பயன்படுத்துகின்றனர்.

இம்மிளகாய் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரத்து 238 ஹெக்டேர் பரப்பளவு மிளகாய் உற்பத்திக்கு உரியவையாக இருந்தாலும் 639 ஹெக்டேர்தான் உற்பத்தித்திறன் மிகுந்ததாய் உள்ளது. 12 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ராமநாதபுரம் மட்டுமன்றி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளிலும் மிளகாய் உற்பத்தி கணிசமாக நடைபெற்று வருகிறது.

வேளாண் அறிஞர் பாமயன் கூறுகையில், “இது மண் சார்ந்த பயிரல்ல என்றாலும், கடந்த 400 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தில் இடம் பெற்றுள்ளது. கரிசல் மண்ணில் விளையும் முண்டு வத்தல் உற்பத்தியில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ராமநாதபுரம் மண்ணில் விளையும் முண்டு வத்தல் தனித்தன்மை வாய்ந்தது” என்கிறார்.

வேளாண் அறிஞர் பாமயன்
வேளாண் அறிஞர் பாமயன்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி காளிமுத்து கூறுகையில், “முண்டு வத்தலின் காரமும், சிவப்பு வண்ணமும்தான் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற முக்கியக் காரணம். மேலும், இந்தப் பயிருக்கான விதையை இந்த விவசாயிகளே எடுத்து வைத்து மிகச் சிறப்பான முறையில் பாதுகாக்கின்றனர். இந்தியாவின் மிளகாய் உற்பத்தியில் 10 விழுக்காடு ராமநாதபுரம் விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது.

விவசாயி காளிமுத்து
விவசாயி காளிமுத்து

ஆந்திர மாநிலம் குண்டூரில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய்க்கு பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடு கூட இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை. புவி சார் குறியீடு பெற்றிருப்பதன் மூலம் நிதி ஒதுக்கீடு அதிகமாகும் என நம்புகிறேன்” என்கிறார்.

பாக்கியநாதன்
விவசாயி பாக்கியநாதன்

ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலியைச் சேர்ந்த மிளகாய் விவசாயியும் தமிழக வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவருமான பாக்கியநாதன் கூறுகையில், “மத்திய அரசின் புவிசார் குறியீடு அறிவிப்பின் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய் க்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு பெருகும். இந்தியாவில் 30 லட்சம் மெட்ரிக் டன் ஆண்டொன்றுக்கு மிளகாய் உற்பத்தி நடைபெறுகிறது அதில் மூன்றில் ஒரு பங்கு இராமநாதபுரம் குண்டு மிளகாயும் அடங்கும். இதற்காக முயற்சி மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிறார்.

விளாத்திகுளத்தைச் சேர்ந்த மிளகாய் விவசாயி வீரய்யா கூறுகையில், “கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு கிலோ முண்டு வத்தல் ரூ.400க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு ரூ.300க்கு விற்பனையானது. தற்போது ரூ.150க்கு கூட விற்பனையாவது பெரும் சவாலாக உள்ளது. மிளகாய் உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உத்தரவாதமில்லாத நிலை உள்ளது.

வீரைய்யா
விவசாயி வீரைய்யா

நிச்சயமான விலை என்பது மிளகாயைப் பொறுத்தவரை இல்லையென்பதால் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். கடந்த முறை மழையால் சேதமான மிளகாய்ப் பயிர்களுக்கு அரசு தருகின்ற இழப்பீடும் விளாத்திகுளம் பகுதியில் நிறைய விவசாயிகளைச் சென்றடையவில்லை. இதிலும் பாகுபாடு உள்ளது. பருவத்திற்கேற்ற நல்ல மழை பொழிவு இருந்தால் ஒரு ஏக்கருக்கு 6-லிருந்து 7 குவிண்டால் வரை விளைச்சல் எடுக்க முடியும். இந்தாண்டு மழை குறைவு என்பதால் 2 குவிண்டால் கிடைப்பதே சவால்தான். ஆகையால் அரசாங்கம் இதற்கு ஒரு நிரந்தர தீர்வினைத் தர வேண்டும்” என்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் விளையக்கூடிய குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில் இதற்கான (GI Tag) புவிசார் குறியீடு வழங்கும் ஒப்புதலுக்கான அனுமதி கிடைக்கப் பெறவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

தற்போது குண்டு மிளகாய் உற்பத்தியில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருவதும் இதற்கான ஒரு சான்றாகும். இங்கு விளையக்கூடிய குண்டு மிளகாய் அதிக காரத்தன்மையும், சுவையும் கொண்டுள்ளதால் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இங்கு விளையக்கூடிய குண்டு மிளகாய் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது மட்டுமின்றி கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்திற்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேலூரின் பாரம்பரியமான இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.