ETV Bharat / state

டிக்கெட் இல்லாமல் ஓசி பயணம்; நடப்பு நிதியாண்டில் ரூ.5.40 கோடி அபராதம்..மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 8:16 AM IST

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்
நடப்பு நிதியாண்டில் ரூ.5.40 கோடி அபராதம்

Madurai Divisional Railway: ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த பயணிகளிடமிருந்து அபராதத் தொகையாக நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.5.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை: ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் மேற்கொள்வது, விதிமுறைகளை மீறி பயணம் செய்தல் உள்பட பல்வேறு காரணங்களுக்காக பயணிகளிடமிருந்து நடப்பு நிதியாண்டில் அபராதத் தொகையாக, இதுவரை ரூ.5.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, கீழ் வகுப்பு பயணச்சீட்டு வைத்து மேல் வகுப்பில் பயணிப்பது, ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான சிறு குழந்தைகளுக்கு பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, அளவுக்கு அதிகமான உடைமைகளை எடுத்துச் செல்வது, ரயிலில் மற்றும் ரயில் நிலையத்தில் புகைபிடிப்பது, அசுத்தம் செய்வது ஆகிய செயல்களைத் தடுப்பதற்காக நிர்வாகம் சார்பில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் கடந்த ஏழு மாதங்களில் நடைபெற்ற பயணச்சீட்டு பரிசோதனையில், பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த பயணிகளிடமிருந்து ரூ.5.40 கோடியை அபராதமாக மதுரை கோட்டம் நிர்வாகம் வசூலித்துள்ளது. இதுவரை சராசரி மாத பயணச்சீட்டு பரிசோதனை வருமானம் ரூ.78 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நள்ளிரவில் வரும் ரயில்களில் தவறான பயணத் தேதியுடன் கூடிய முன்பதிவு பயணச் சீட்டுடன் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் பயண கட்டணத்துடன் குறைந்தபட்ச அபராதமாக ரூ.250 அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அக்டோபர் மாத பண்டிகை காலத்தில் ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில், சென்னை - மதுரை வைகை விரைவு ரயில், பாலக்காடு விரைவு ரயில் ஆகியவற்றில் சிறப்பு பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழு பயணித்து வருகிறது.

மேலும், இந்தக் குழு முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளுடன் பயணம் செய்யும் பயணிகளை பொது பெட்டிகளுக்கு சென்று பயணிக்கும்படி அறிவுறுத்துகிறது. இதன் மூலம் முன்பதிவு செய்த பெட்டிகளில், பயணிகள் எந்த இடையூறும் இன்றி பயணிக்கின்றனர்.

இதனையடுத்து, முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு எடுக்கும் பயணிகளுக்கு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள், அலைபேசி செயலிகள், கியூ ஆர் கோட் மூலம் பயணிச்சீட்டு எடுக்கும் வசதி ஆகியவை அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களில் பயணிகள் பயணச்சீட்டு எடுக்க உதவும் வகையில், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மாலத்தீவு புதிய அதிபரால் இந்திய மீனவர்களுக்கு சிக்கலா? பவளத்தீவில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.