ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு: உதவி ஆய்வாளரின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 10:19 PM IST

madurai highcourt
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Sathankulam case: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020இல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ரகு கணேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,"கைது செய்யப்பட்டதில் இருந்து ஜாமீன் கிடைக்காமல் உள்ளனர். சட்டப்படி இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், பல முறை கால நீட்டிப்பு பெற்று உள்ளனர். எனவே காலதாமதம் ஆகிறது. இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறினார்.

அப்போது, சி.பி.ஐ. தரப்பில், “சாத்தான்குளம் வழக்கு இறுதி கட்ட விசாரணையில் உள்ளது. இந்த நேரத்தில் ரகு கணேஷுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைக்கவும், சாட்சியங்கள் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். ஆகையால், ஜாமீன் வழங்க உத்தரவு அளிக்கக்கூடாது” என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் கேட்டு, ரகு கணேஷ் தொடர்ந்த வழக்கை 5வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தென்காசி டூ காசி.. சிறப்பு ரயிலின் முன்பதிவு தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.