ETV Bharat / state

மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தல் பணிக்கு பயன்படுத்த தடை கோரி வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 5:43 PM IST

hc-madurai-branch-ordered-eci-to-respond-to-a-case-seeking-a-ban-on-the-use-of-madurai-medical-college-for-election-purposes
மதுரை மருத்துவக் கல்லூரியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு; இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Madurai Medical College: மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் பணிக்கு பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் சங்கம் சார்பாக ராஜா முகமது உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மருத்துவக்கல்லூரி மிகவும் பிரபலமான கல்லூரி. இங்கு சுமார், 4,000க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும்போது மதுரை மருத்துவக் கல்லூரி முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதோடு, 3 மாதங்களுக்கு முன்பாகவே மதுரை மருத்துவக் கல்லூரி தேர்தல் ஆணையத்தால் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதோடு, பதிவான வாக்குகள் மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதன் காரணமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையான மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளுக்குச் செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுவதோடு, காவல்துறை மாணவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.

இதனால் மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்தல் பணிகள் எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனவும், தேர்தல் பணிகளை வேறு மையத்திற்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மருத்துவக் கல்லூரி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மதுரை மருத்துவக் கல்லூரியைத் தவிர்த்து வேறு கலை, அறிவியல் கல்லூரிகளையோ அல்லது வேறு இடத்தையோ தேர்வு செய்யலாமா என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மேல்மா சிப்காட் விவகாரம்; விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.