ETV Bharat / state

Arikomban: அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடும்படி வழக்கு - கடுப்பான நீதிபதிகள்!

author img

By

Published : Jun 6, 2023, 1:09 PM IST

அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடும்படி வழக்கு - கடுப்பான நீதிபதிகள்
அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடும்படி வழக்கு - கடுப்பான நீதிபதிகள்

அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கானது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “அரிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை, கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித் திரிந்து மக்களை அச்சுறுத்தியது.

கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது. ஆனால், விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் யானையை விட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அரிக்கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது.

சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே, அரிக்கொம்பன் ஊருக்குள் நுழையும் நிலை உருவானது. சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர், அரிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், ஊடகங்கள் யானையை முரட்டுத்தனமான, இழிவான வார்த்தைகளால் குறிப்பிடுவது ஏற்கும் வகையில் இல்லை. ஆகவே, யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.

ஊடகங்கள் முரட்டுத்தனமான, இழிவான வார்த்தைகளால் குறிப்பிடுவதை தவிர்க்க உத்தரவிட வேண்டும். அரிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு விசாரித்தது. அப்போது, “சில விஷயங்களில் அதிகாரிகள்தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு, விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை தற்போது பிடித்துள்ளது. யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. யானைகள், காடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிடப்படுகிறது” என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

கடந்த சில நாட்களாக தேனி கம்பம் பகுதியில் சுற்றி வந்த அரிக்கொம்பன் யானை, நேற்று (ஜூன் 5) வனத்துறையினரின் தீவிர முயற்சியால் பிடிக்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதியில் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Arikomban: முடிவுக்கு வந்த அரிக்கொம்பனின் ஆட்டம்.. 10 நாட்கள் வேட்டையின் முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.