ETV Bharat / state

காதல் மனைவி கடத்தல் வழக்கு: மீண்டும் ட்விஸ்ட்.. விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

author img

By

Published : Feb 13, 2023, 3:25 PM IST

காதல் மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்றதாக கணவன் சார்பில் தொடுத்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காதல் மனைவி கடத்தல் வழக்கு
காதல் மனைவி கடத்தல் வழக்கு

மதுரை: தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன்.

இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா், நவீன் பட்டேல். இவருடைய மகள் கிருத்திகா பட்டேல். நானும் கிருத்திகா பட்டேலும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 4ஆம் தேதி அன்றும் நானும் எனது மனைவியுடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினோம். விசாரணையின் முடிவில் கிருத்திகா பட்டேல், கணவராகிய என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து,அவரை என்னுடன் அழைத்து சென்றேன். இந்நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, நவீன் பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி எனது மனைவி கிருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.

நான் இது குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், கிருத்திகா பட்டேல்லை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தைப் பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கிருத்திகா பட்டேலை கடத்திச் சென்று விட்டனர். எனவே, கிருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், மனுதாரர் மாரியப்பன் வினித் திருமண புகைப்படங்களைக் காட்டி கிருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை செய்தனர். பின்னர், 'கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும்.

கிருத்திகா-வை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற வேண்டும். கிருத்திகா-வின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் கிருத்திகா-வை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தென்காசி காவல் துறையினர் தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிபதிகள், கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணையில் பெற்றோர் உடன் செல்வதாக தெரிவித்துள்ளார். மனுதாரர் தரப்பில், கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணை முறையாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை பொறுத்தவரையில் பெண் யாருடன் செல்வதாக தெரிவிக்கிறாரோ அவருடன் தான் அனுப்பப்படுவார் என்றனர். அரசு தரப்பில், கிருத்திகா பெற்றோர்கள் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உறவினர்களிடம் கிருத்திகாவை ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், உறவினர்கள் தரப்பில் கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனு செய்யவும், அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்றும்; கிருத்திகா பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் கூறி வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளனர்.

மேலும் கிருத்திகா பெற்றோர் தரப்பில், இந்த விவகாரத்தில் மீடியாக்கள் மீது புகார் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், 'தாங்களாக விருப்பப்பட்டு செய்தது; இதில் மீடியாக்களை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை' என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.