ETV Bharat / state

மூன்றரை மாதங்களில் போக்சோ குற்றத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை - விருதுநகர் போலீசாருக்கு குவியும் பாராட்டு

author img

By

Published : Jun 7, 2023, 8:57 AM IST

போக்சோ குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
போக்சோ குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

POCSO குற்றவாளிக்கு வழக்கு தாக்கல் செய்த மூன்றரை மாத காலத்திற்குள் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த விருதுநகர் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான நபர், இரண்டு சிறுமிகளை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமிகளின் தாயார் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி மேற்பார்வையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வந்தது. இதனையடுத்து, சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திலகராணி புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளார்.

அது மட்டுமல்லாமல், 39 நாட்களில் வழக்கின் புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து நேற்று (ஜூன் 6) திருவில்லிப்புத்தூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி, பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட 68 வயது நபரை குற்றவாளி என அறிவித்து இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்தார்.

மேலும், நீதிமன்ற விசாரணையின்போது குறுகிய காலத்தில் சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தியும், வழக்கில் பாதிக்கப்பட்டவருக்குத் தக்க உதவிகளை வழங்கியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்திருக்கிறது. இதன் மூலம் வழக்கு தாக்கலான மூன்றரை மாத காலத்திற்குள் வழக்கு விசாரணை முடிவுற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக போக்சோ தொடர்பான குற்ற வழக்குகளில் தென்மண்டல காவல் துறை மிகத் துரிதமாகச் செயல்படும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போக்சோ வழக்குகளை விசாரணை செய்து வரும் காவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படு வருகிறது. வழக்கின் அவ்வப்போதைய நிலவரம் குறித்து உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் இணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவ்வப்போது குறுஞ்செய்திகள் அனுப்பியும், வழக்கின் நிலவரம் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து தெரிவித்தும் வந்துள்ளனர். எனவே, இதற்கு உறுதுணயாக இருந்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 48 போக்சோ வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 72 வயது வார்டன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.