ETV Bharat / state

மதுரையில் காந்தி அரையாடை ஏற்று 100 ஆண்டுகள் நிறைவு; இதற்கான  விழாவில் தேசப்பிதாவின் பேத்தி..!

author img

By

Published : Sep 4, 2021, 7:02 PM IST

Updated : Sep 4, 2021, 8:15 PM IST

மகாத்மா காந்தியடிகள் அரையாடை ஏற்று நூற்றாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நினைவுகூரல் விழா, மதுரையில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா பங்கேற்கிறார்.

மதுரையில் காந்தி அரையாடை துறந்த நூற்றாண்டு விழா
மதுரையில் காந்தி அரையாடை துறந்த நூற்றாண்டு விழா

மதுரை: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மதுரையில் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள், அரையாடை விரதம் பூண்டார்.

அதன் நூற்றாண்டு விழா மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சார்பாக கொண்டாடப்படவுள்ளது.

இதுகுறித்து காந்தி அருங்காட்சியகத்தின் துணைத்தலைவர் மாணிக்கம் கூறுகையில், ''மகாத்மா காந்தியடிகள் 1921 செப்டம்பரில், மதுரை மாநகர் வருகை தந்தபோது, இந்தியாவில் உள்ள சாதாரண ஏழை மக்களோடு, தம்மை அடையாளப்படுத்தும் வகையில், முழங்காலளவு மட்டுமே, இனி ஆடை அணிவேன் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22ஆம் தேதி மேற்கொண்டார். இந்திய வரலாற்றில் இந்த நிகழ்வு 'அண்ணல் காந்தியடிகளின் ஆடைப்புரட்சி' எனக் குறிக்கப்படுகின்றது.

நூற்றாண்டு விழாவில் ராஜாஜியின் பேத்தி

இந்த 'ஆடைப்புரட்சி'யின் நூற்றாண்டு விழாவை, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் ஒருங்கிணைப்பில், இந்திய அளவில் உள்ள அனைத்து காந்திய நிறுவனங்களும் இணைந்து கொண்டாடவிருக்கிறோம்.

இந்த நூற்றாண்டு விழாவில் காந்தியடிகள், ராஜாஜியின் வழித்தோன்றல் பேத்தி திருமதி. தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்து கொள்கிறார்.

இந்த நூற்றாண்டு விழாவினையொட்டி 'Development and Democracy'; 'வளர்ச்சி மற்றும் ஜனநாயகம்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், வாழ்த்துச்செய்தி கொண்ட நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது.

முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு, சிறப்பு மலரை வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள அனுமதி கோரியுள்ளோம்.

தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்பர்.

காந்தியடிகளின் 'ஆடைப்புரட்சி' நடைபெற்ற 251-ஏ, மேலமாசி வீதியில் ஆடைப்புரட்சியை நினைவு கூரும் வகையில், சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 9,10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு 'அரையாடையில் அண்ணல்' என்னும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 93 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

காந்தியடிகளின் ஆடைப்புரட்சி

இதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் நூற்றாண்டு விழாவில் வழங்கப்படுகின்றன.

கல்லூரி மாணவ, மாணவியருக்கு இன்றைய சூழலில் காந்தியத்தின் எளிய வாழ்க்கை, கதர் கிராமக் கைத்தொழில்களின் தேவை, 'சமுதாய மாற்றத்திற்குத் தனிமனிதர்களின் பங்கு' என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

காந்தி அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் மாணிக்கம்
காந்தி அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் மாணிக்கம்

இந்த இரு தலைப்புகளிலும் 46 கல்லூரி மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.

சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவ, மாணவியருக்கு நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

'இன்டாக் இந்தியன் நேஷனல் டிரஸ்ட் பார் ஆர்ட் அண்ட் கல்சுரல் ஹெரிடேஜ் மதுரைக் கிளை' அமைப்புடன் இணைந்து, காந்தியடிகளின் ஆடைப்புரட்சி நிகழ்வினை மையப்படுத்தி, சிறுகையேடு வெளியிடப்பட உள்ளது.

இதனை அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கொடுக்க உள்ளோம். இதனடிப்படையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செப்டம்பர் 22ஆம் நாளன்று விழா ஏற்பாடு செய்து, மாணவர்களுக்கு இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்' என்றார்.

காந்தி அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் மாணிக்கம்
இந்த நேர்காணலின்போது காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளர் ஜவகர் பாபு, செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம் புதுடெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை, காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குநர் நந்தா ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

Last Updated : Sep 4, 2021, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.