ETV Bharat / state

’என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையை தொடங்கி வைக்க அமித்ஷா தமிழகம் வருகை!

author img

By

Published : Jul 28, 2023, 7:58 AM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை துவங்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருகிறார்.

padayatra
அண்ணாமலையின் பாதயாத்திரையை துவங்கி வைக்க அமித்ஷா வருகை

மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்திலிருந்து 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை துவங்க உள்ளார். அதற்கான துவக்க விழா பொதுக்கூட்டம், இன்று மாலை 4.30 மணியளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. ஜூலை 29ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை முதல் கட்ட யாத்திரை நடைபெறுகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு கட்டமாக ஐந்து கட்டம் வரை தமிழ்நாடு முழுவதும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த பாத யாத்திரை செல்லும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சுமார் 168 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, கால்நடையாக 1,800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளதாகவும், வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதிக்கு முன்பாக நிறைவடையும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த யாத்திரையை துவங்கி வைப்பதற்கான பொதுக்கூட்டம் இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு மாலை 5 மணியளவில் வந்து சேர்கிறார். மாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து அன்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். பின்னர் நாளை (ஜூலை 29) அதிகாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிறகு காலை 11 மணியளவில் தனியார் விடுதியில் நடைபெறும் அப்துல் கலாம் குறித்த நூல் ஒன்றை வெளியிடுகிறார்.

அதன் பின்னர் 12 மணியளவில் அப்துல் கலாம் பிறந்த வீட்டைப் பார்வையிடுகிறார். பேய்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். பிறகு பிற்பகல் 1 மணியளவில் சுவாமி விவேகானந்தர் நினைவு இல்லத்தைப் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து 1.20 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபத்திலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு சுமார் மாலை 4 மணியளவில் வந்தடைகிறார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் என்பது அமைச்சர் அமித்ஷா வருகைக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகும். தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - அண்ணாமலை வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.