ETV Bharat / state

கடல் தாண்டி வீசும் தமிழ் வாசம்... சீனர்கள் தமிழ் கற்க "அடிப்படை தமிழ்" புத்தகம் வெளியிட்ட சீன ஆசிரியை!

author img

By

Published : May 31, 2023, 10:07 PM IST

Etv Bharat
Etv Bharat

சீன நாட்டைச் சேர்ந்த தமிழாசிரியை நிறைமதி கிகி ஸாங், சீனர்களும் தமிழ் கற்றுக் கொள்ளும் வகையில் சீன மொழியில் ’அடிப்படை தமிழ்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

சீனர்கள் தமிழ் கற்றுக்கொள்ள சீனத் தமிழாசிரியை நிறைமதி கிகி ஸாங் வெளியிட்ட ’அடிப்படை தமிழ்’!!

மதுரை: சீனா நாட்டிலுள்ள யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் கிகி ஸாங். இவர் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழ் கற்று தனது பெயரை நிறைமதி என மாற்றிக் கொண்டவர். தற்போது யுனான் மாகாணத்தில் உள்ள யுனான் மின்சூ பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

தமிழகத்திற்கு பலமுறை வருகை தந்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை குறித்து அறிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் தமிழ் மொழி குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத காலம் தங்கிப் பயிற்சி மேற்கொண்டு உள்ளார்.

மதுரையில் உள்ள கீழடி அகழாய்வுக் களம், உலக தமிழ்ச் சங்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெறும் பண்பாட்டு, கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்கேற்று உள்ளூர் மக்களின் வட்டார தமிழ் மொழி வழக்கையும் ஆராய்ந்தவர்.

இந்நிலையில் சீன மொழி வாயிலாக தமிழைக் கற்றுக் கொள்ளும் வகையில் 'அடிப்படை தமிழ்' என்ற நூலை அண்மையில் சீனாவில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள நேர்காணலில், "சீன மொழி மூலம் அடிப்படை தமிழைக் கற்கும் வகையில் சீன நாட்டில் வெளியான முதல் தமிழ் நூல் இதுவாகும். இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமின்றி சுயமாக தமிழ் கற்க விரும்பும் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்றது.

நான் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சீனாவின் யுனான் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது துறை மாணவர்கள் மிக எளிதாக தமிழ் கற்றுக் கொள்ளும் வகையில், நூல் ஒன்றை உருவாக்குவதற்கு முடிவு செய்து இந்நூலை எழுதத் தொடங்கினேன். இந்த நூலை எழுதி முடித்து ஒவ்வொரு முறையும் மாணவர்களிடம் கொடுத்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அதன் அடிப்படையில் மேலும் அதில் திருத்தங்கள் செய்தேன்.

சீனர்கள் தமிழ் கற்றுக்கொள்ள சீனத் தமிழாசிரியை நிறைமதி கிகி ஸாங் வெளியிட்ட ’அடிப்படை தமிழ்’!!
சீனர்கள் தமிழ் கற்றுக்கொள்ள சீனத் தமிழாசிரியை நிறைமதி கிகி ஸாங் வெளியிட்ட ’அடிப்படை தமிழ்’!!

மேலும் மொழி சார்ந்த வல்லுனர்களிடமும் இந்த நூலை கொடுத்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று செழுமைப்படுத்தினேன். சீனாவில் உள்ள பல்வேறு புத்தகக் கடைகளிலும், ஆன்லைனிலும் ரூ.380க்கு இந்த நூல் கிடைக்கும். சீன நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களும் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அகத்திய முனிவரால் வளர்க்கப்பட்ட தமிழ் மொழியை நானும் வளர்க்க நினைப்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்.

தொல்காப்பியம் குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையை சீன மொழியில் அடுத்த மாதம் சமர்ப்பிக்க உள்ளேன். இந்த கட்டுரையின் வாயிலாக மொழி சார் உலகத்தில் தமிழ் மொழியின் தொன்மையையும் தனிச்சிறப்பையும் தெரியப்படுத்த எதுவாக இருக்கும் என நம்புகிறேன். தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட பயணங்களில் தமிழர்கள் எனக்கு அளித்த உற்சாகம் என்னுடைய தமிழ் பணிக்கு ஊக்கம் அளிக்கிறது.

எனது இந்த முயற்சியின் வாயிலாக சீனா மற்றும் தமிழ் மக்களிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும் என நம்புகிறேன். மனித குலத்தின் இரண்டு தொன்மையான பண்பாட்டை மேம்படுத்துவதை என்னுடைய கடமையாக கருதுகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க: "கல்வி பண்பு மட்டுமல்ல சமூகம் சார்ந்த உணர்வு" தமிழக அரசின் உயர்கல்வி குழுவில் இருந்து விலகியது ஏன்? - பேராசிரியர் ஜவஹர் நேசன் சிறப்பு நேர்காணல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.