ETV Bharat / state

Madurai Railway Station: பாண்டியன் எக்ஸ்பிரஸ் வேண்டும்; மீன் சின்னம் வேண்டாமா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!

author img

By

Published : Jun 21, 2023, 10:21 PM IST

Updated : Jun 21, 2023, 10:43 PM IST

Etv Bharat
Etv Bharat

பாண்டிய மன்னர்களின் அடையாளமாகத் திகழும் மீன் சிலையை அகற்றிய மதுரை கோட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் கொந்தளித்துள்ள சமூக ஆர்வலர்கள் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் மட்டும் வேண்டும்; ஆனால், அவர்களின் கொடியான மீன் சின்னம் மட்டும் கசக்கிறதா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து இந்த சிறப்புத் தொகுப்பு அலசுகிறது.

மீன் சிலை அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள்

மதுரை: உலகிலேயே மிக நீண்ட காலம் ஆண்ட அரச மரபு என்ற பெருமை மட்டுமன்றி, மிகத் தொன்மை வாய்ந்த அரச பரம்பரையாகவும் திகழ்ந்தது, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட 'பாண்டியப் பேரரசு' (Pandya dynasty) ஆகும். அதேபோன்று, மொழிக்கென்று 'சங்கம் நிறுவி தமிழை வளர்த்த பெருமையும் பாண்டியர்களுக்கே' உண்டு. சோழர்களுக்கு புலிக்கொடியும், சேரர்களுக்கு வில்-அம்பு கொடியும் எப்படி அடையாளமோ, அதுபோன்று பாண்டியர்களின் அடையாளம் 'மீன் கொடி'.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஜயநகரப் பேரரசின் எச்சங்கள் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பலவற்றில் நிறைந்து காணப்படும் நிலையில், பாண்டியப் பேரரசை நினைவுபடுத்தும் சின்னங்கள் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. மதுரை அம்மன் சன்னதி அருகேயுள்ள விட்டவாசல் மட்டும் பாண்டிய அரசர்களின் நினைவைச் சுமந்து கொண்டு நிற்கிறது. அதற்கு அடுத்த படியாக மீனாட்சி திருக்கோயில் (Meenakshi Amman Temple).

1999-ல் நிறுவப்பட்ட 'மீன் சின்னம்': இந்நிலையில், கடந்த 1999ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலைய சந்திப்பின் கிழக்கு வாயிலில், மங்கம்மாள் சத்திரத்திற்கு நேர் எதிரே மூன்று மீன்கள் துள்ளிக்குதிக்கும் வகையில் வெண்கலத்தினலான சிலை ஒன்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு நிறுவப்பட்டது. மிக அழகிய தோற்றம் வாய்ந்த இந்த சிலை கடந்த 2018ஆம் ஆண்டு விரிவாக்கப் பணிகள் என்ற காரணத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு, ரயில்வே வளாகத்தில் கொண்டு போய் போடப்பட்டது.

நீண்ட நெடிய வரலாற்றில் மதுரையின் புகழ்: இந்நிலையில், இந்த சிலையை மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டங்களும் தற்போது வலுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மதுரை நிர்வாகி கதிர்நிலவன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'மதுரை என்றதும் நினைவுக்கு வருவது பாண்டிய மன்னர்களும், அந்த மன்னர்களுள் ஒருவராக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதிக்காக கண்ணகி வாதாடியதும்தான்.

ஆனால், அந்த பாண்டிய மன்னர்களின் நினைவைப் போற்றும் எந்தவித அடையாளங்களோ நினைவுச் சின்னங்களோ கிடையாது. 5ஆம் உலகத் தமிழ் மாநாடு (World Tamil Conference) கடந்த 1981ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், மூவேந்தர்களின் நினைவாக நகரின் எல்லைப்புறங்களில் தோரண வாயில்களை உருவாக்கினார். அப்போது கூட பாண்டியர்களின் நினைவாக நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற சிந்தனை ஆட்சியாளர்களுக்கு தோன்றவில்லை.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக 'தமிழ்': உலகப்புகழ் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவார். அவருடைய பெயர் தாங்கிய நினைவுக் கல்வெட்டுகளோ, சிலையோ இதுவரை வைக்கப்படவில்லை. பாண்டியன் மன்னனிடம் நீதிகேட்டு தமிழில் வாதாடியவள் கண்ணகி. இன்றைக்கு உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கக் கோரி போராடிக் கொண்டிருக்கிறோம்.

கம்பீரமாக நின்ற 'மீன் சிலை' அகற்றம்: ஆனால், அந்தக் கண்ணகிக்குக்கூட மதுரையில் சிலை கிடையாது. கடந்த 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக பாண்டியர்களை நினைவுகூறும் விதமாக மீன் சின்னத்தை 15 அடி உயரத்தில் மூன்று டன் எடை கொண்ட மூன்று மீன்கள் துள்ளிக் குதிப்பதைப் போன்று மதுரை ரயில்வே நிலையத்தின் கிழக்கு வாயிலில் அமைத்தார்கள். ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியோடுதான் அச்சிலை அமைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக அந்தச் சிலை அதே இடத்தில் இருந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு, ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக அச்சிலையை அகற்றி ரயில்வே வளாகத்திலேயே ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிட்டார்கள்.

மீண்டும் மீன் சிலையை நிறுவும் பணிகள் கிடப்பில்: பணிகள் நடைபெற்று முடிந்த பின்னரும்கூட, அந்தச் சிலையை முறைப்படி மீண்டும் அங்கு வைக்கவில்லை. கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் அச்சிலையை மீண்டும் நிறுவுவதில் தொய்வு இருந்தது. இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் மதுரை ரயில்வே கேட்ட மேலாளரிடம் மீண்டும் சிலையை வைக்கக் கோரி, கோரிக்கை வைத்தனர். தற்போதுள்ள தேசியக்கொடி அருகிலேயே அச்சிலை அமையும் வண்ணம் வரைபடமும் ரயில்வே நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது.

இதனையடுத்து 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமானப் பணி நடைபெறுவதற்கான அடையாளமாக செங்கலை வைத்து தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் ஜெகதீசன், 'ரூ.20 லட்சம் செலவில் மின்விளக்கு, நீரூற்று ஆகியவை தமிழ்நாடு தொழில் வர்த்தகம் சங்கம் சார்பில் அமைக்கவிருக்கிறோம்' என்று பேட்டி அளித்தார். ஆனால், அதற்குப் பிறகு அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

மீன் சிலையை மீண்டும் நிறுவ நீதிமன்றத்தில் வழக்கு: இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் ஆஜரான ரயில்வே நிர்வாகம், சிலையை வைத்துவிட்டோம் (Re-installation of the iconic three bronze fish statue at the Madurai Junction railway station) என்று கூறியதால், அந்த வழக்கு தள்ளுபடியானது. அதற்குப் பிறகும்கூட ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், பிறகு மீண்டும் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்தார்.

நினைவு சின்னங்கள் அமைக்கக் கூடாதென சுற்றிக்கை?: அந்த வழக்கின் விசாரணை, கடந்த சில நாட்களுக்கு முன்பாக வந்தபோது, இந்த சிலைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என பல முன்னுக்குப் பின் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், ரயில் நிலையம் முன்பாக தலைவர்களின் சிலைகளோ அல்லது நினைவுச் சின்னங்களோ அமைக்கப்படக்கூடாது என்று எங்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டிருப்பதால் நாங்கள் இதில் தலையிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தனர்.

கையை விரித்த மதுரை ரயில்வே நிர்வாகம்: ஏன்? இதுபோன்று ரயில்வே நிர்வாகம் நடந்து கொள்கிறது என்பது எங்களுக்குப் புரியவில்லை. ரயில்வே கட்டுமானப் பணிகளின் போது மீன் சிலை எங்கு வைக்கப்படும் என்பதற்கான வரைபடம் தயாரித்து அதனை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மறுப்பது ஏன் என்பது தெரியவில்லை.

ரூ.94 ஆயிரம் பணம் கட்டிய நிலையில் தடை உத்தரவு ஏன்?: மேலும், நீரூற்று அமைப்பதற்கு தனியாக மின்மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு, இதற்காக தமிழ்நாடு தொழில் வர்த்தகம் சங்கம் ரூ.94 ஆயிரம் ரயில்வே நிர்வாகத்திற்கு பணமும் கட்டியுள்ளது. அனைத்து உத்தரவும் உறுதிமொழியும் அளித்தப் பின்னரும் கூட, சிலை வைப்பதற்கான தடை உத்தரவு எங்களிடம் இருக்கிறது என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்?

நாடெங்கும் ரயில் நிலையங்களில் சிலைகள்; மதுரையில் மட்டும் மறுப்பது ஏன்?: அதுமட்டுமன்றி, இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் தலைவர்களின் சிலைகள் உள்ளன. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ரயில் நிலையத்தில் சிற்பி யுவராஜால் உருவாக்கப்பட்ட பயணிகள் சிலை உள்ளது. ஹூப்ளி ரயில் நிலையத்தில் பல்வேறு சிலைகள் உள்ளன. பெல்லாரி ரயில் நிலையத்திலும் காந்தி சிலை உள்ளது. இவ்வாறு எண்ணற்ற சிலைகள் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இருக்கும்போது மதுரையில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன்?

தமிழின விரோதப் போக்கா? வரலாற்றை மழுங்கடிக்கிறதா ரயில்வே நிர்வாகம்: அதே நேரத்தில், புதிதாக வைக்கச் சொல்லி நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை. வைக்கப்பட்ட சிலையை மீண்டும் ஏன் வைக்கவில்லை என்றுதான் கேட்கிறோம். மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றால், அது நடைபெற்று முடிந்தபிறகு அதே சிலையை வைக்க வேண்டும் என்பது நடைமுறை. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு மேம்பால வேலைகளிலும்கூட இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் மாறாக, பொய்யான தகவல்களை நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. இதனை தமிழின விரோதப் போக்காகவே நாங்கள் கருதுகிறோம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பது பாண்டிய மன்னர்களில் ஒருவரின் பெயர். தற்போது நடைபெறுகின்ற அரசு ஆரிய சார்புள்ள அரசு என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் இருக்கும்போது பாண்டியர்களின் சின்னம் எங்கே?: பாண்டிய மன்னர்களின் அடையாளங்களோ, அவர்கள் பயன்படுத்தி மீன் சின்னமோ இருக்கக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறோம். இதற்கு தெளிவான விளக்கம் தர வேண்டும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. பாண்டிய மன்னரின் பெயரைச் சுமந்து கொண்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஓடுகிறது. ஆனால், பாண்டியர்களின் மீன் சின்னம் மட்டும் வேண்டாமா..? உடனடியாக ரயில்வே நிர்வாகம் தனது தவறைத் திருத்திக் கொண்டு, மீண்டும் அதே இடத்தில் மீன் சின்னத்தை அமைக்க வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

மீன் சின்னத்தை மீண்டும் நிறுவுக: இது குறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், 'மதுரை ரயில்வே நிர்வாகத்தால் பாண்டிய மன்னர்களின் அடையாளமான மீன் சின்னம் அமைக்கப்பட்டது. இந்த மண்ணின் அடையாளம். தற்போது அதனை மேம்பாட்டு பணியைக் காரணம் காட்டி, அதனை அப்புறப்படுத்தி ஏதோ ஒரு மூலையில் போட்டு வைத்துள்ளார்கள். நிறைய செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த சின்னத்தை உடனடியாக அவ்விடத்திலேயே வைக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும். ஆகையால், மதுரை என்றாலே பாண்டியர்கள். அவர்களின் அடையாளமான மீன். இதனைக் கருத்திற்கொண்டு மீண்டும் அதனை நிறுவ வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், 'கடந்த 1999ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தின் கிழக்கு வாயிலில் மூன்று மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுவது போன்றும் அதன் வாய்ப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும் வகையில் நீரூற்றும் வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்டது. அப்போதே தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதலோடு ரூ.8 லட்சம் செலவில் அமைத்தது. தொடர்ந்தும் அதனை நாங்கள் பராமரித்து வந்தோம்.

கடந்த 2011ஆம் ஆண்டு நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் ஆகியவை பழுதான நிலையில், ரயில்வே நிர்வாகம் கடிதம் அனுப்பி எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனையும் சரிசெய்து கொடுத்தோம். இது மதுரையை அரசாட்சி செய்த பாண்டியர்களின் அடையாளம். அந்த அடிப்படையில்தான், நாங்கள் அச்சிலையை அமைத்தோம். கடந்த 2018ஆம் ஆண்டு ரயில்வே மறுசீரமைப்புப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டன.

ரயில்வே வளாகத்திலேயே கிடக்கும் மீன் சிலை: அச்சமயம் பேருந்துகள் ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டதால், முகப்பிலிருந்த மீன் சிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனை வேறிடத்தில் வைக்கும்பொருட்டு அகற்றி எடுத்துக் கொண்டு செல்ல எங்களிடம் ரயில்வே நிர்வாகம் கூறியது. நாங்கள் மூன்று டன் எடையுள்ள அச்சிலையை கொண்டு செல்லுவது சாத்தியமில்லை. மேலும் முழுவதும் பித்தளையால் ஆனது என்பதால், ஏதேனும் சேதாரம் ஏற்பட்டுவிடும். ஆகையால் அவர்கள் வளாகத்திலேயே அதனைப் பத்திரப்படுத்த வேண்டுகோள் விடுத்தோம். அதனையும் ஏற்றுக்கொண்டு ரயில்வே வளாகத்திலேயே அச்சிலை தற்போது வரை வைக்கப்பட்டுள்ளது.

பிறகு ரயில்வே மாஸ்டர் பிளானில் இந்த மீன் சின்னம், மாநகராட்சி சார்பாக ஈ-டாய்லெட் வைக்கப்பட்டிருந்த இடத்தின் பின்புறம் இதனை நிறுவ முடிவெடுக்கப்பட்டு, அதற்காக அன்றைய மாநகராட்சி ஆணையர் விசாகனிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் ஒரே வாரத்திற்குள் அந்த ஈ-டாய்லெட்டை அப்புறப்படுத்தி இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த மாஸ்டர் பிளானில் ரயில்வே உயர் அதிகாரிகள் ஏறக்குறைய பத்து பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.

2021-ல் மீண்டும் நிறுவும் பணி தொடக்கம்: நீரூற்றுக்காக திட்டமிடும்போது, தேசியக் கொடி அமைந்துள்ள இடத்தில் நீரோட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்விடத்தில் 350 அடி ஆழத்தில் சப்மெர்சிபில் ஆழ்துளைக் குழாய் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு, அதனையும் செய்து முடித்தோம். அதற்காக ஆன ரூ.2 லட்சத்தையும் எங்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு செலவு செய்தோம். அந்த இடத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் பூமி பூஜை போடப்பட்டது.

கோட்ட பிரிவு பொறியாளர் அனுமதி மறுப்பு: இதில் ரயில்வே அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதற்கு தேவையான மின்சாரத்திற்காக ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு ரூ.98 ஆயிரத்து 895 பணம் கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதனையும் கோட்ட நிதி மேலாளரிடம் கட்டிய நிலையில், இதற்கான அனுமதி கடிதத்தை கோட்ட ரயில்வே மின்பொறியாளர் வழங்கினார். அதற்குரிய ரசீதும் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகும்கூட, மின் இணைப்பு தரப்படவில்லை. கோட்ட பிரிவு பொறியாளர் தலையிட்டு அனுமதி தர முடியாது என்றார். ரயில்வேக்குள் உள்ள பல்வேறு துறைகளுக்கிடையே போதுமான ஒத்துழைப்பு இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

நீதிமன்றத்தில் முன்னுக்குப்பின் முரணான தகவல்: இதற்கிடையே வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. அதில் முக்கிய எதிர்மனுதாரர் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆவார். பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்று அந்த வழக்கில் தவறான தகவலைக் கூறினார். இதனையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை. இதனையடுத்து தீரன் திருமுருகன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை மாநகராட்சி ஆணையாளரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

மாநகராட்சிக்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கில் ரயில்வே நிர்வாகம், அந்த இடமும், அந்த சிலையும் எங்களுக்கு சொந்தமில்லை. மொத்தத்தில் இது தொடர்பான எந்த விஷயத்திலும் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று விளக்கமளித்தது. இதில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை அவர்களிடம் எழுப்பினர். மேலும் மாநகராட்சியும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து ஒரு இடத்தை முடிவு செய்ய வேண்டும். அடுத்த விசாரணைக்குள் இதனைக் குறிப்பிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ரயில்வே சீரமைப்புப் பணியிடங்களைத் தவிர வேறு ஒரு நல்ல இடத்தைக் காட்டினால் அவ்விடத்தில் மேற்கொண்டு எங்கள் கட்டுமானப் பணிகளை நாங்கள் தொடர தயாராக இருக்கிறோம் என்று நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்துள்ளோம்' என்றார்.

எப்போது ஜொலிக்குமோ மீன் சின்னம்?: பாரம்பரிய மிக்க நீண்ட வரலாறு கொண்ட மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்களின் அடையாளமக திகழும் மீன் சின்னத்தை மீண்டும் மதுரை சந்திப்பின் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "யோகாவை பிரபலப்படுத்தியதில் நேருவுக்கே முக்கியப் பங்கு" - காங்கிரஸ்!

Last Updated :Jun 21, 2023, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.