ETV Bharat / state

பிரபல இரானி கும்பலின் முக்கிய குற்றவாளி கைது - ஓசூர் போலீசாரின் அதிரடி வேட்டை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:39 PM IST

பிரபல இரானி கும்பலின் முக்கிய குற்றவாளி கைது
பிரபல இரானி கும்பலின் முக்கிய குற்றவாளி கைது

Irani Gang main culprit arrest: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொள்ளை, வழிப்பறி என கைவரிசை காட்டி வந்த இரானி கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஓசூர் போலிசாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 7 நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இரானி கும்பலின் முக்கிய குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, சரோஜா என்னும் பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் 27 சவரன் தங்க நகையை பறித்து சென்றதாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், கொள்ளையிட்டு சென்றது கொள்ளை, வழிப்பறிக்கு பிரபலமான இரானி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் சமீர் சபீர் இராணி (27), அபேதார் (24) ஆவர்.

இவர்கள் மும்பையிலிருந்து ரயில் மூலம் வந்து இருசக்கர வாகனத்தை திருடி வழிப்பறியில் ஈடுபட்டு, மீண்டும் பெங்களூர் சென்று விமானத்தில் தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சமீர் சபீர் இரானி என்பவர் கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் வழிப்பறி, கொள்ளை என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி என்பது ஓசூர் போலிசார் விசாரணையில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, மிகப்பெரிய கொள்ளை கூட்டமான இரானி கும்பலின் முக்கிய குற்றவாளியை பிடிக்க, ஓசூர் நகர இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படை போலிசார் 2 முறை மும்பைக்கு சென்று கொள்ளையரை நெருங்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரை பிடிக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து, கடந்த செப் 8ம் தேதி மும்பை இரயில்வே நிலையத்தில், பலரின் மத்தியில் சபீர் சமீர் இரானியை பள்ளி வாகனத்தில் சென்று ஓசூர் போலீசார் கைது செய்தனர். அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, இன்று (செப்.13) கொள்ளையர் சமீர் சபீர் இரானியை போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி 7 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளார்.

தற்போது போலீசார், கொள்ளையர் சபீர் சமீர் இரானியிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்யவும், மற்ற கொள்ளையர்கள் குறித்து தகவல்களை திரட்டவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தங்கள் உயிரை பணயம் வைத்து இந்திய அளவில் தேடப்பட்டு வந்த கொள்ளையனை கைது செய்த ஓசூர் தனிப்படை போலிசாரை டி.எஸ்.பி பாபு பிரசாந்த் வெகுவாக பாராட்டினார்.

இதுக்குறித்து நகை பறிப்பிற்கு ஆளான சரோஜா பேசுகையில், “ வடமாநில கொள்ளையனை போலிசார் பிடிப்பார்களா என நினைத்தபோது, மும்பைக்கு சென்று கொள்ளையனை கைது செய்து வந்த தமிழக போலிசார் கிங் என நிரூபித்திருக்கிறார்கள். நகை கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதால் போலிசாரை மனதார பாராட்டுவதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: உடல் உறுப்புக்களை விற்று தருவதாக மோசடி.. நைஜீரியா, உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.