ETV Bharat / state

விமான நிலைய விரிவாக்கம் என்பது தனியாருக்கு தாரைவார்க்கத்தான்.. எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 4:54 PM IST

Congress MP Jothimani
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

Congress MP Jothimani: பிரதமர் மோடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது, தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கத்தான் என்று கரூரில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் எம்பி ஜோதிமணி பேட்டி

கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி, கல்வியறிவு மேம்பாடு குறித்து நேற்று (ஜன.3) மாலை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக எம்.பி ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்து, புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளது மகிழ்ச்சி. ஆனால், தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கத்தான் இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு 25 விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதாக முடிவெடுத்துள்ளது. இதில் கோவை, சென்னை மற்றும் திருச்சி ஆகிய மூன்று விமான நிலையங்களும் தனியாருக்கு வழங்கப்படுவதற்காக பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியாருக்கு வழங்கும் பட்சத்தில், பிரதமர் மோடியின் நெருங்கிய கார்ப்பரேட் நண்பரான அதானிக்கு வழங்காமல் இருப்பாரே என தமிழக மக்களுக்கு பிரதமர் மோடியால் உறுதி அளிக்க முடியுமா? என்று கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே மும்பை, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், லக்னோ, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ஏழு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மக்களது வரிப்பணத்தில் கட்டப்பட்ட, அதிக வருவாய் ஈட்டக் கூடியதும், அதிக பயணிகள் செல்லக் கூடியதுமாக உள்ள விமான நிலையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு எவ்வித நிதி உதவியும் அளிக்கவில்லை. தமிழகத்தின் வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாகத் தெரிவித்தார்.

மேலும், சுனாமியைக்கூட மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவிக்கிறார். சுனாமி வந்த பொழுது தேசிய பேரிடர் ஆணையம் என்ற ஒன்று இல்லை. தமிழ்நாட்டு மக்களையும், தமிழக அரசையும் அவமதிக்கும் போக்கை மத்திய நிதியமைச்சர் கையாண்டுள்ளார்" என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.