ETV Bharat / state

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 1:13 PM IST

Villupuram District Principal Sessions Court
சி.வே.சண்முகம் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

C.V.Shanmugam: தமிழக அரசு மற்றும் தமிழக முதலமைச்சர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, ஜன.18 மற்றும் 23ஆம் தேதிகளுக்கு ஒத்தி வைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் நாட்டார்மங்கலத்தில், கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதியும், வானூர் வட்டம் ஆரோவில் பேருந்து நிறுத்தம் அருகே மார்ச் 10ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் மே 1ஆம் தேதியும் அதிமுக சார்பில் தனித்தனியே விலைவாசி உயர்வு மற்றும் தற்போதைய அரசால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அதிமுக பொதுக் கூட்டங்கள் நடந்தன.

இதில் சட்டத்துறை முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதிமன்றத்திலும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் தனித்தனியே வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடந்தது. இதில் உடல்நலக் குறைவு காரணமாக சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, சி.வி.சண்முகம் வழக்கில் ஆஜராகாதது குறித்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜன.4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி, இது தொடர்பான 6 அவதூறு வழக்குகளும் இன்று (ஜன.4) விசாரணைக்கு வந்தது. இதில், சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை வரும் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மொத்தம் 6 அவதூறு வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: கொடைக்கானலில் மூன்று மாதங்களாக திறக்கப்படாத பேரிஜம் ஏரி.. மீண்டும் திறக்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.