ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு.. கரூரில் தொடரும் சோதனைகள் - முழு பின்னணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 8:20 AM IST

Etv Bharat
Etv Bharat

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பு நாளை (ஜன.12) வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கு மற்றும் அது தொடர்பாக நடந்த சோதனைகள் குறித்த செய்தியைப் பார்க்கலாம்.

கரூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளராகவும், தமிழக அமைச்சராகவும் உள்ள செந்தில்பாலாஜி, கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான அதிமுகவின் ஆட்சிக் காலத்தில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்து, சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதன் பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒய்.பாலாஜி மற்றும் கார்த்திகை ராஜன் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் அனைத்து வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த 2023ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, முழுமையான விசாரணையை மீண்டும் துவங்கி, இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையில் இருந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

கடந்த ஆண்டு தொடங்கிய சோதனைகள்: அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் 2023ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அந்த வகையில் மே 26ஆம் தேதி, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றபோது, வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் திமுக தொண்டர் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து, ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், திமுக தொண்டர்கள் வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவரை தாக்கியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், திமுகவினர் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டதை அடுத்து, ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவில், குற்றம் சாட்டப்பட்ட திமுக தொண்டர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செந்தில் பாலாஜியின் கைதும், தொடர் ஜாமீன் மனுக்களும்: இதனிடையே சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சிகிச்சையிலிருந்து திரும்பிய பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். மேலும், 14வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உடல்நலன் கருதி ஜாமீன் வழங்க வேண்டி, மூன்று முறை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான இறுதி தீர்ப்பு, நாளை (ஜன.12) வழங்க இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

கரூரில் தொடரும் சோதனைகள்: இந்நிலையில், கரூரில் ஜனவரி 10ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் சுப்பிரமணிக்குச் சொந்தமான உணவகத்தில், கோவையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், சொத்து மதிப்பீடு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக மாலை 3 மணியளவில், கரூர் கோடங்கிபட்டி ஈசநத்தம் சாலையில் உள்ள வால்காட்டுப்புதூர் பகுதியில் கொங்கு மெஸ் சுப்பிரமணிக்குச் சொந்தமான ஃபார்ம் ஹவுஸிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சொத்து மதிப்பீடு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

பின்னர், மாலை 4.30 மணியளவில் கரூர்-சேலம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டினை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துவிட்டு, மேல கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், நிலம் சம்பந்தமான முக்கிய ஆவணங்களை சரிபார்த்தனர்.

மேலும் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சில முக்கிய இடங்களில் சோதனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில், நாளை (ஜன.12) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவிற்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் ஆய்வு நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: நியூ ரைஸ் நிதி நிறுவன மோசடியில் எடுக்கபட்ட நடவடிக்கை என்ன?.. நீதிபதி சரமாரி கேள்வி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.