ETV Bharat / state

எனக்கு சால்வை எங்கே? - கடுப்பான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்!

author img

By

Published : Jan 2, 2023, 4:18 PM IST

எனக்கு சால்வை எங்கே? - கடுப்பான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்!
எனக்கு சால்வை எங்கே? - கடுப்பான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்!

மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்று வந்த கரூர் மாவட்ட மாணவர்களுக்கு சால்வை அணிவிக்கையில், தனக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யாததால், வெற்றி விழாவை தலைமை ஆசிரியர் புறக்கணித்தது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கடுப்பான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரின் வீடியோ

கரூர்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் வட்டார மற்றும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வான பள்ளி மாணவர்கள் சுமார் 487 பேர் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகினர். இவர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி கடந்த டிச.27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், குழு நடனத்தில் மாநில அளவில் முதலிடமும், மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாய்ப்பாட்டு பிரிவில் முதலிடமும், ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, இசை சங்கமம் பிரிவில் முதலிடம் எனவும் மூன்று பிரிவுகளில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றது.

அதேபோல் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா, களிமண் சிற்பம் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த நிலையில் இன்று (ஜன.2) குழு நடனப் பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்ற கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், தங்களது சொந்த ஊருக்கு வந்தனர்.

அப்போது பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க, ஊர் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் மாணவிகளுக்கு பொதுமக்கள் சார்பிலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பிலும் சால்வைகள் அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது.

அப்போது, உடன் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வைரமுர்த்தி, தனக்கு சால்வை அணிவிக்காததால் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறினார். மேலும் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வெற்றி பெற்ற மாணவிகளை அழைத்துச் சென்றபோது, அங்கு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

அப்போதும் பள்ளி தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். இதனையடுத்து பள்ளி ஆசிரியர்களும் வகுப்பறைக்குச் சென்றனர். இதனால் வெற்றி பெற்ற மாணவிகள், ஊர் பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “தலைமை ஆசிரியரின் செயல் வருத்தம் அளிக்கிறது. வருகை புரிந்த பொதுமக்களுக்கும் வெற்றி பெற்று திரும்பிய மாணவிகளுக்கும் வரவேற்பு அளிக்க வேண்டிய தலைமை ஆசிரியர், தனக்கு சால்வை அணிவிக்காததால் புறக்கணித்து விட்டு சென்று விட்டார்” என்றார்.

மேலும் தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி, 2019ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிகப் பணிதான்.. அமைச்சர் மா.சு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.