ETV Bharat / state

ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிகப் பணிதான்.. அமைச்சர் மா.சு விளக்கம்!

author img

By

Published : Jan 2, 2023, 3:10 PM IST

ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக பணிதான்.. அமைச்சர் மா.சு விளக்கம்!
ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக பணிதான்.. அமைச்சர் மா.சு விளக்கம்!

தேசிய நல்வாழ்வுத் திட்டத்தில் நியமிக்கப்படும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்கப்படாது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம் குறித்து கூறியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பு

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக ‘நலம் 365’ என்ற யூடியூப் சேனலை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் 365 யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான நோக்கமின்றி மக்களின் சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்க யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டது.

24 மணிநேரமும் இந்த சேனல் இயங்கும். யோகா, உடற்பயிற்சி அவசியம், உணவுப் பழக்க வழக்கங்கள், மகப்பேறு, குழந்தைகள், சுகப்பிரசவம் சிறந்தது, சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி அவசியம் குறித்து இந்தச் சேனலில் ஒளிபரப்பப்படும்.

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு 2,347 பேரை எம்.ஆர்.பி தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்தனர். அதில் 2,323 பேர் பணியில் சேர்ந்துவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில் எம்.ஆர்.பி மூலம் விண்ணப்பித்த 5,736 செவிலியர்களில் 2,366 பேர் பணியில் சேர்ந்தனர். இந்தப் பணி நியமனத்தில் அதிமுக அரசால் கரோனா தொற்றைக் காரணம் காட்டி, சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமல், விகிதாச்சார அடிப்படை இன்றி, அடிப்படை விதிமுறைகளை மீறி பணியமர்த்தப்பட்டனர்.

மேலும் பல்வேறு நபர்களை சிபாரிசு கடிதங்களை கொடுத்து பணியில் சேர்த்துள்ளனர். பேரிடர் காலத்தில் விதிமுறையினை மீறி பணிக்கு வந்தவர்களை பணியில் சேர்க்க வேண்டாம் என்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இவர்களை பணியை விட்டு அனுப்பும் நோக்கம் அரசுக்கு இல்லை.

நீதிமன்றங்களின் உத்தரவால் நான்கு மாதங்களாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், பணி நீட்டிப்பு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது. கரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றியவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2,200 செவிலியர் பணியிடங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் காலியாக உள்ள இடைநிலை சுகாதார செவிலியர்கள் 270 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய முடியாத நிலையில், கரோனா காலத்தில் பணியாற்றிய 2,301 ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பணியில், தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின்கீழ் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் ஏற்கெனவே 14,000 ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர்.

இனிமேல், மாதம் 18,000 ரூபாய் சம்பளத்தில் தற்காலிகமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின்கீழ் பணியமர்த்தப்படுவர். ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை. இதனை கரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் உணர வேண்டும். மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மனிதாபிமான அடிப்படையில், சுகாதாரத் துறையின் மீது அக்கறை கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். அவர் அடுத்து பேட்டி அளிக்கும்போது இதற்குப் பதில் கூற வேண்டும். தேசிய சுகாதாரத்திட்டத்தின்கீழ், நியமனம் செய்யப்படும் செவிலியர்கள் தற்காலிகமாக மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள்.

எம்ஆர்பி மூலம் 4,308 செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடக்கின்றன. அதில் தேர்வு எழுதி வரலாம். ஆனால், அவர்கள் விதிமீறல்படிதான் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், கரோனா காலத்தில் துணிந்து பணிக்கு வந்தவர்கள் என்பதால், இவர்களுக்கு ஆரம்ப சுகாதார மையத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

ஒருவர் கூட பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். கடந்த 24ஆம் தேதி முதல் சீனாவில் இருந்து தமிழ்நாடு வந்த இருவர் உள்பட வெளிநாட்டில் இருந்து வந்த மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. பிஏ5-இன் உள் உருமாற்றம் BF.7 ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது.

BA 5.2, விருதுநகரில் இருப்பவருக்கு தொற்று உள்ளது. இவர்களது மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு பரிசோதனை செய்ததில், 6 பேரின் மாதிரிகளின் முடிவு வெளியாகி உள்ளது. அந்த 6 பேரில் BF.7 என்ற ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் 93 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்ததில், அதில் 91 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பும், 2 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.