நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கரூர் எஸ்பிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By

Published : Jun 23, 2023, 9:53 AM IST

court defamation case

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் 4 முறைக்கு மேல் விசாரணைக்கு ஆஜராகாததால், கட்டாயமாக ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் எஸ்.பிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கரூர்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டிகத்தின் உறுப்பினருமான சாமானிய மக்கள் நலக் கட்சி கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், கரூர் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கால் குற்ற சரித்திர பதிவேட்டில் தனது பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், தற்போது அது தனக்கு வழக்கறிஞராக தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவதற்கு தடையாக உள்ளதாகவும், எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த 23 டிசம்பர் 2022 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குற்றச்சரித்திர பதிவேட்டில் சண்முகத்தின் பெயரை நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை கரூர் மாவட்ட காவல் துறை கடைபிடிக்காமல் தொடர்ந்து தன் மீது பொய் வழக்குகள் பதிந்து வருவதாக கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று நோட்டீஸ் அனுப்பினார்.

அதன் பின்னரும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சண்முகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோர் ஆஜராகிய நிலையில், சண்முகத்திற்கு ஆதரவாக கடந்த ஜூன் 2, 9, 12 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தொடர்ந்து 4 முறையும் ஆஜராகாத காரணத்தினால் நீண்ட விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வருகிற ஜூலை 5 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், கந்து வட்டிக்கு எதிரான கூட்டிகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், சாமானிய மக்கள் நலக் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் மக்கள் பணி ஆற்றி வருவதால், பல்வேறு மக்கள் பிரச்னைகளை அரசு நிர்வாகத்திடம், உயர் காவல் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வதால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் என் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டது.

மேலும், அந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்று விடுதலையும் பெற்றுள்ளேன். இதனிடையே கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு தமிழ்நாடு பார் கவுன்சிலில் விண்ணப்பம் அளித்திருந்தபோது, என் மீது குற்ற சரித்திரப் பதிவேடு இருப்பதால் எனது பதிவு தாமதப்படுத்தப்பட்டது.

இதனால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்தும் நடவடிக்கை இல்லாத காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மக்கள் கண்காணிப்பகத்தின் மனித உரிமை காப்பாளராக இருப்பதால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கில் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஜராகாததால், நீதிமன்றத்தைத் தொடர்ந்து அவமதித்ததாக நீதிபதி நேற்று நடைபெற்ற விசாரணையில் கடுமையான கண்டனம் தெரிவித்தார். இனி வருகிற ஜூலை 5 அன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கட்டாயம் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் எனக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.