ETV Bharat / state

'கரூர் - கோவை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்' - அமைச்சர் எ.வ. வேலு!

author img

By

Published : May 8, 2023, 10:37 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஏ.வ. வேலு
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஏ.வ. வேலு

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று ஒரு வருடத்திற்குள் நான்கு வழி சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திண்டுக்கல் குஜிலியம்பாறை சாலையில் சாலையோரமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, “இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட ஊர் கரூர். இந்த ஊர் வளர்ச்சி அடைய தமிழ்நாடு திராவிட மாடல் அரசு முன் நின்று செயல்படுத்தும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் உள்பட 1403 கிலோ மீட்டர் சாலையை தமிழ்நாடு அரசின் மூலம் பராமரிக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி - மேலப்பாளையம் பகுதியில் கடந்த 2012-13ஆம் ஆண்டில் 13.70 கோடி ரூபாயில் பாலம் கட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக இணைப்பு சாலை அமைக்கப்படாமல் பாலமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இணைப்பு சாலை அப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் வழியாக 10 கி.மீ., தூரம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான அடிப்படை பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, நெடுஞ்சாலை எண் 65 கரூர் நகரப் பகுதியில் பேருந்து நிலைய ரவுண்டானா நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளதால் அங்கே நகரம் படிக்கட்டு அமைக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “வர்த்தக சங்கத்தினர் கேட்டுக் கொண்டதின் பேரில் நகர வளர்ச்சிக்காக 11 சுற்று வட்ட புறவழிச் சாலை அமைப்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு முடிந்தவுடன் சுற்றுவட்ட சாலை அமைக்க முக்கியத்துவம் வழங்கப்படும்.

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச் சாலையாக உள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இந்த சாலை நான்கு வழிச் சாலையாக அமைத்திருக்க வேண்டும். தற்போது இந்த வழித்தடத்தில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று ஒரு வருடத்திற்குள் நான்கு வழிச் சாலை அமைக்கப்படும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “கரூர் திருமாநிலையூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தின் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான அடிப்படை பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: இரு அணியினரும் இணைந்து செயல்பட முடிவு; ஓபிஎஸ் - டிடிவி தினகரன் கூட்டாகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.