ETV Bharat / state

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயில் தேரோட்டம்: குமரி மக்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்த கேரள பக்தர்கள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 4:00 PM IST

தேரை வடம் பிடித்து இழுத்த கேரள பக்தர்கள்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயில் தேரோட்டம்

Suchindram Thanumalayan Swamy Temple: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயிலில் மார்கழி மாத திருவிழாவில் ஒன்பதாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று (டிச.26) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயில் தேரோட்டம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணு மாலைய சாமி சன்னதி அமைந்து உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 22 அடி உயரம் ஆஞ்சநேயரின் சிலையுடன் கூடிய சன்னதி இந்த கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

மார்கழித் திருவிழா தேரோட்டம், சித்திரை தெப்பத் திருவிழா, ஆவணி மாத தேர்த் திருவிழா, மாசி திருக்கல்யாண திருவிழா, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் வரும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆகியவை இந்த கோயிலின் முக்கிய விழாக்களாகும்.

இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையிலே இந்த ஆண்டுக்கான மார்கழி மாத திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வாகன பவனி, சப்பரபவனி, மக்கள்மார் சந்திப்பு, கருட தரிசனம், கைலாச பர்வத வாகன நிகழ்ச்சி, சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.

இதையும் படிங்க: "அழிந்துவரும் பனை மரங்களை காக்க வேண்டும்" - ஈரோட்டில் கம்பத்து நடனமாடி தொழிலாளர்கள் கோரிக்கை!

இன்று (டிச.26) அதிகாலை கங்காள நாதர் வீதி உலா வருதல், அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளும் அறம் பலத்த நாயகி அம்மன், விநாயகர் ஆகியோர் கோயிலிலிருந்து மேள தாளங்கள் முழங்கத் தட்டு வாகனத்தில் புறப்பட்டு வந்து மூன்று தேர்களிலும் தனித்தனியே எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். பெரிய தேரில் சுவாமி அம்பாளும், அம்மன் தேரில் அறம் எடுத்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகர் என மூன்று தேர்களும் ஒரே நேரத்தில் வலம் வந்தன.

இந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (டிச.26) இரவு மிகவும் பிரசித்தி பெற்ற சப்த வர்ண நிகழ்ச்சியும், பத்தாம் நாள் திருவிழாவான நாளை (டிச.27) ஆருத்ரா தரிசனம் திருவாதிரைக் களியுடன் மார்கழி மாத திருவிழா நிறைவு பெற உள்ளது.

இன்று தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி, அஞ்சு கிராமம், குளச்சல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும் சுசீந்திரம் கோயிலுக்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் 19வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு.. உறவினர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.