ETV Bharat / state

"அதிமுகவை அழிக்க கைக்கூலியாக இருக்கிறார் ஈபிஎஸ்" - நாஞ்சில் கோலப்பன் குற்றச்சாட்டு!

author img

By

Published : Mar 9, 2023, 3:16 PM IST

நாஞ்சில் கோலப்பன்
நாஞ்சில் கோலப்பன்

அதிமுகவை அழிக்க வேறு கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கைக்கூலியாக இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈபிஎஸ் மீது நாஞ்சில் கோலப்பன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி: அதிமுக ஓபிஎஸ் அணியில் அமைப்புச் செயலாளர் பொருப்பில் இருக்கும் நாஞ்சில் கோலப்பன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நிதியை கையில் வைத்துக் கொண்டு, அதிமுகவை அபகரிக்க நினைக்கும் ஈபிஎஸ், தான் தோன்றித்தனமாக நடந்ததால் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததற்கு காரணம்" என்றார்.

மேலும் கடந்த தேர்தலில் 8,000 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் இருந்த இந்த தொகுதியில் தற்போது 67 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி தழுவி உள்ளதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி யாருடனோ கூட்டு வைத்துக் கொண்டு அதிமுகவை அழிக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். எட்டு முறை தோல்வியை கண்ட எடப்பாடி பழனிச்சாமி தனது எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் கட்சியில் பயணித்த ஓபிஎஸ் பல சோதனை, சாதனைகளை கண்டவர் என்பதால் அவரது பேச்சை தான் கேட்க வேண்டும் என்று பேசிய கோலப்பன், நான்கு ஆண்டு காலம் இடையில் வந்த இடைக்கால பொதுச் செயலாளர் பாதியிலேயே சென்று விடுவார் என்றும், அவரிடம் பணம் உள்ளது என்று பின்னாலேயே சென்றால் தோல்வி மட்டுமே மிஞ்சும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, ஈபிஎஸ் எந்த கட்சிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் என்று தெரியாமலேயே செயல்பட்டு வருகிறார் என்றும், அதிமுகவை அழிப்பதற்காக பிற கட்சிகளுக்கு கைக்கூலியாக ஈபிஎஸ் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதனை புரிந்து கொண்ட பாஜக, தற்போது ஈபிஎஸ்-ஐ எதிர்த்து வருவது போல், தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் ஈபிஎஸ் எதிர்க்கப்படுவார் என்றும், செல்லும் இடம் எல்லாம் வெறுப்பை பெறுவார் என்றும் கூறினார். மேலும் அவரது படங்கள், உருவ பொம்மைகள் தமிழ்நாட்டு மக்களால் எரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டியதில் 18 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அதனை மூடி மறைத்து வேடிக்கை பார்த்து வருவதாகவும் குற்றம்சாட்டிய கோலப்பன், திமுகவோடு ரகசிய தொடர்பில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக கூறினார்.

சட்டமன்ற தேர்தல், உள்ளாச்சி தேர்தல் உட்பட எட்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை அடைந்ததால் எடப்பாடி ஆளுமை இல்லாதவர் என்பது உறுதியாகி விட்டது என்றும், வெறும் பணத்தை நம்பி மட்டுமே ஈபிஎஸ் கட்சியை நடத்தி வருவதாகவும், இதனால் தன்னுடைய எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோலப்பன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் நாடு கண்ட வளர்ச்சி என்ன? - 'உங்களில் ஒருவன்' வீடியோவில் விளாசிய ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.