ETV Bharat / state

குமரி சட்டமன்றத்தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் - கலப்பை மக்கள் இயக்கம் கோரிக்கை

author img

By

Published : Jul 4, 2023, 2:41 PM IST

குமரி சட்டமன்ற தொகுதியை இரண்டாக பிரிக்க வேண்டும் - கலப்பை மக்கள் இயக்கம் கோரிக்கை
குமரி சட்டமன்ற தொகுதியை இரண்டாக பிரிக்க வேண்டும் - கலப்பை மக்கள் இயக்கம் கோரிக்கை

அரசின் திட்டங்கள் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்களின் வசதிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி

கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் இந்த கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தோவாளை தாலுகா மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு பகுதியைக் கொண்டது. அது மட்டுமல்லாமல் தேரூர், மருங்கூர், செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் ஆகிய முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது.

மேலும், பகவதி அம்மன் கோயில், தூய அலங்கார மாதா ஆலயம், சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகம், சுசீந்திரம் கோயில் உள்பட பல்வேறு கோயில்களும் இங்கு உள்ளன. அதேநேரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக குமரிக்கடல், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் வட்டக்கோட்டை போன்றவை விளங்குகின்றன.

மேலும், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ரப்பர் உள்பட கிராம்பு எஸ்டேட்களும் இந்தப் பகுதியில் உள்ளன. 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி இந்த கன்னியாகுமரி சட்டமன்றத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 982 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 47 ஆயிரத்து 347 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 104 பேரும் உள்ளனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலங்களாக பலரால் எழுப்பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில், அதன் அமைப்பு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ''கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக கன்னியாகுமரி தொகுதி இருந்து வருகிறது. இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் இந்த தொகுதியில் பகவதி அம்மன் கோயில், தூய அலங்கார மாதா ஆலயம், சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகம், சுசீந்திரம் கோயில் உள்பட பல்வேறு கோயில்களும், வட்டக்கோட்டை போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

புவியியல் அமைப்பின்படி, இந்தத் தொகுதி நீளமான தொகுதி என்பதால் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் மேம்படவும், கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் முன்னேற்றம் பெறவும், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறவும், அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காகவும் இந்த தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அரசின் திட்டங்கள் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, தொகுதியை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப் வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த தளவாய்சுந்தரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “காங்கிரஸ் அரசியலில் இல்லாத நிலை உருவாக வேண்டும்” - அண்ணாமலை பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.