குமரியில் மீன்வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

குமரியில் மீன்வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!
Kanyakumari DVAC Raid: மீன்வளத்துறையில் பணிபுரிந்து வரும் மகேஷ் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். விசாரனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த கேசவன் புதூரைச் சேர்ந்தவர், வேலாயுத பெருமாள். இவர் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து வந்தார். இவர் இறந்ததை அடுத்து, இவரது மகன் மகேஷ் என்பவர் பொதுப்பணித் துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அதன் பின்னர், தற்போது அயலகப் பணியாக மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2013 முதல் 2022ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக இரண்டரை கோடி ரூபாய் வரை
சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. எனவே, இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், மகேஷ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை (நவ.17) கேசவன் புதூர் அய்யா குட்டி நாடார் தெருவில் உள்ள மகேஷ் வீட்டில், ஏ.டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில், 10 ஆண்டுகளில் எட்டு வீடுகள் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, வீட்டின் ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், மகேஷ் எங்கெல்லாம் வீடு கட்டியுள்ளார் என்பது குறித்த விவரங்களையும், வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் சோதனையின் முடிவில்தான் கூடுதலாக வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார் என்ற அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துள்ளதாகவும், அதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
