ETV Bharat / state

பழனி கோயிலில் பஞ்சாமிர்த பில் விவகாரம்: இந்து அறநிலையத்துறையின் மீது மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்படும்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 6:22 PM IST

Updated : Dec 16, 2023, 6:44 PM IST

Palani Murugan Temple
பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கு தற்போது வரை பில் வழங்கப்படவில்லை

Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கு பில் வழங்குவதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பாக தவறான தகவலை தெரிவித்து தொடர்பாக மேல் முறையீடு செய்யப்படும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

பழனி கோயிலில் பஞ்சாமிர்த பில் விவகாரம்: இந்து அறநிலையத்துறையின் மீது மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்படும்...

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பழனி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தப் பிரசாதம் தயாரிக்க பிரத்யேக ஆலை அமைக்கப்பட்டு நவீன முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பழனி கோயிலில் மேல்பிரகாரம், அடிவாரம் பாதவிநாயகர் கோயில், கிரிவீதி, வின்ச் மற்றும் ரோப்கார் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என 10க்கும் பல்வேறு இடங்களில் பஞ்சாமிர்தம் ஸ்டால் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

500 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் ரூ.40, 45 என இருவேறு வகை டப்பாக்களில் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் கிலோ கணக்கில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பக்தர்களுக்கு முறையாக பில் வழங்காமல் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து பழனியைச் சார்ந்த முருகப் பக்தரான செந்தில்குமார் என்பவர், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் விற்பனை செய்யும் பஞ்சாமிர்தத்திற்கு பில் வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் போது பக்தர்களுக்கு பில் வழங்கப்படுவதாக நேற்று (டிச.15) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (டிச.16) பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனைக் கடைகளில் தற்போது வரை பில் இல்லாமல், பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் பில் வழங்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்த செந்தில்குமார், "மதுரை உயர்நீதிமன்றத்தில், பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனைக்கு பில் வழங்கப்பட்டு வருவதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்தது. அதற்கு ஆதாரமாக பில் வழங்குவது போன்ற புகைப்படம் ஒன்றையும் சமர்பித்தனர். மேலும், பில் வழங்குவதில் சர்வர் பிரச்சனை ஏற்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஆனால், செல்போன் வாங்கி வைக்கவும், ரோப்கார் மற்றும் வின்ச் டிக்கெட் விற்பனை செய்வது, கட்டளைப் பூஜைகளுக்கும், தரிசன டிக்கெட் என அனைத்திற்கும் கணினி மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு எல்லாம் சர்வர் பிரச்சனை ஏற்படாமல் சரியாக செயல்படும்போது, பஞ்சாமிர்தம் விற்பனைக்கு பில் வழங்குவதில் மட்டும் சர்வர் பிரச்னையை காரணம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை.

பஞ்சாமிர்த விற்பனையில் பக்தர்கள் ஏமாற்றப் படுகிறார்கள். பஞ்சாமிர்த விற்பனைக்கு பில் வழங்கினால் பக்தர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும். எனவே, நீதிமன்றத்தில் தவறான தகவலை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என தெரிவித்தார்.

பழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கு பில் வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு, தற்போது வரை பில் வழங்காமல் விற்பனைச் செய்யும் திருக்கோயில் நிர்வாகத்தின் செயல்பாடு பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கூட்டணி துரோகமே விஜயகாந்த் உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணம் - பிரேமலதா விஜயகாந்த்..

Last Updated :Dec 16, 2023, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.