ETV Bharat / state

அரூரில் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

author img

By

Published : Jan 12, 2021, 7:07 AM IST

அரூர்
அரூர்

தருமபுரி: அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்திப் பணி செய்யாமல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை கடந்த மாதம் தொடங்கியது.

ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 26 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், விடுப்பு ஈட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும் திடீரென ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி செய்யாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'பொதுத்துறை சர்க்கரை ஆலை நிறுவனம், கரோனா தொற்றைக் காரணம்காட்டி 10 விழுக்காடு போனஸ் தொகையை குறைத்துள்ளது. அதனை முழுமையாக வழங்க வேண்டும்.

மேலும், 26 மாத சம்பளத்தை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. எனவே, இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' எனத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் அரவைக்கு வந்த கரும்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள், விவசாயிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

'தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக முன்னரே அறிவித்திருந்தால், நாங்கள் கரும்பு அறுவடை செய்யாமல் நிறுத்தி இருப்போம். தற்போது அரவை செய்யாததால், கரும்பு எடை குறையும்' என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.