ETV Bharat / state

''தருமபுரியில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா தொழிற்சாலை அமையவுள்ளது'' - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

author img

By

Published : Apr 2, 2023, 6:00 PM IST

Etv Bharat
Etv Bharat

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா தொழிற்சாலை அமைய உள்ளதாகவும்; எதிர்காலத்தில் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியை அடையும் எனவும் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் ரூபாய் 7 கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தபின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர், “தருமபுரியில் அமைய உள்ள சிப்காட் தொழில் பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் இருந்த பிரச்னைகள் தற்போது தீர்க்கப்பட்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பில் சிப்காட் நுழைவுவாயில் மற்றும் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் இங்கு அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எதிர்காலத்தில் தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் கண்டுள்ள தொழில் வளர்ச்சியை அடையும். ரூபாய் 4 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டம் பகுதி இரண்டு தற்போது மறு மதிப்பீடு செய்து ரூபாய் 7 ஆயிரம் கோடி மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 42 கோடி மதிப்பீட்டில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக புதிய கட்டட கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேளாண்துறை மூலம் சிறுதானியங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் பயிரிடுவதில் தருமபுரி மாவட்டம் முக்கிய இடத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரள சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - புனித யாத்திரை சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் - முதலமைச்சர் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.