ETV Bharat / state

"மத்திய அரசு 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது" - அண்ணாமலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:13 PM IST

தருமபுரியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை
தருமபுரியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை

En mann En makkal yatra in Dharmapuri: தருமபுரியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

தருமபுரியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை

பாப்பிரெட்டிப்பட்டி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தில் பங்கேற்று பொது மக்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "பாரத பிரதமர் மோடி 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணிகளை வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வழக்கமாக நடத்தப்படும் 4 தேர்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு அழுத்தத்திற்கு பின்பு தற்போது ஜனவரி மாதம் தேர்வுகளை நடத்துவதாக தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் திமுக மூன்று லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்தது.

ஆனால் இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி முடிந்தும் தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவே இல்லை. இந்தியா கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 139 விவசாயிகளுக்கு 15 தவணைகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 'பிரதம மந்திரி விவசாய நிதி திட்டம்' மூலம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நிதி பெறுவதற்கு உள்ள சில இடர்பாடுகளை அரசும் அதிகாரிகளும் நினைத்தால் உடனடியாக தீர்த்து அவர்களுக்கு முறையாக நிதியை வழங்க முடியும்.

ஆனால், ஆண்டு கணக்கில் இழுத்தடித்து விவசாயிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இது போன்ற பிரச்சினைகளை அரசு அதிகாரிகள் உடனடியாக தீர்க்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எண்ணூர் அம்மோனியம் வாயு கசிவு: மீண்டும் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.