ETV Bharat / state

தேர்தலை முன்னிட்டு 21,289 ரவுடிகள் மீது நடவடிக்கை: காவல் துறை தகவல்

author img

By

Published : Mar 18, 2021, 8:40 AM IST

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள், ஜெலட்டின் குச்சிகள்
கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள், ஜெலட்டின் குச்சிகள்

கடலூர் : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 ஆயிரத்து 289 ரவுடிகள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் உரிமமற்ற நாட்டுத்துப்பாக்கிகள், வெடிப்பொருள்கள், தடை செய்யப்பட்ட மதுபானங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியக் குற்றவாளிகள் 166 பேர் உள்பட மொத்தம் 21 ஆயிரத்து 289 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 732 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாநில முழுவதும் மொத்தம் 18 ஆயிரத்து 183 நபர்களிடம் பிணையப் பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் (விலக்கு அளிக்கப்பட்டதை தவிர) 18,593 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கைப்பற்றப்பட்ட உரிமமற்ற துப்பாக்கிகள், நாட்டு வெடி குண்டுகள், கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தர்மபுரி - 7 நாட்டுத் துப்பாக்கிகள்.

ஈரோடு - 2 நாட்டுத் துப்பாக்கிகள்.

கிருஷ்ணகிரி - 4 நாட்டுத் துப்பாக்கிகள்.

வேலூர் - 1 நாட்டுத் துப்பாக்கி.

திருப்பத்தூர் - 1 நாட்டுத் துப்பாக்கி.

மதுரை - 2 தோட்டாக்களுடன் 1 கைத் துப்பாக்கி, 2 நாட்டு வெடிகுண்டுகள்.

மொத்தம் உரிமமற்ற 16 துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், கைது நடவடிக்கைகள்:

கடலூர் - 75 கிலோ வெடிமருந்து.

திருப்பூர் - 150 கிலோ வெடிமருந்து, 890 டெட்டனேட்டர், 786 ஜெலட்டின் குச்சிகள்.

விழுப்புரம் - 375 ஜெலட்டின் குச்சிகள், 450 டெட்டனேட்டர்கள்.

அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்களால் ஒன்பதாயிரத்து 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒன்பதாயிரத்து 95 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 412 லிட்டர் தடை செய்யப்பட்ட மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 பேர் குண்டர் தடைச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஆயிரத்து 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரச்சனைக்குரிய மூன்றாயிரத்து 261 இடங்களில், மூன்றாயிரத்து 188 பேர்மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 65 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, 525 இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரச்சனைக்குரிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : 'சதி செய்து தொகுதி மாற்றிவிட்டார்கள்' - ஓம்சக்தி சேகர் கண்ணீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.