ETV Bharat / state

நெய்வேலி வன்முறை: 21 போலீசார் படுகாயம்; அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு!

author img

By

Published : Jul 28, 2023, 7:57 PM IST

Etv Bharat
Etv Bharat

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டார். போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 21 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி 2-ஆவது சுரங்க விரிவாக்க பணிக்காக பரவனாற்றுக்கு என்எல்சி சுரங்க நீரை எடுத்துச் செல்லும் வகையில், நேற்று முன்தினம்(ஜூலை 26) காலை வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி என்எல்சி சார்பில் தொடங்கப்பட்டது.

இந்த பணியின் போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களுக்கு நடுவே பொக்லைன் இயந்திரங்கள் வைத்து வாய்க்கால் வெட்டப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பணிகள் தொடர்ந்தன. இந்த விவகாரம் தமிழக அளவில் விவசாயிகள் மத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே, என்எல்சி விரிவாக்க பணிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், என்எல்சியை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பாமகவினர் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமகவினர் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதோடு, தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஒருகட்டத்தில் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் ஒருமணிநேரத்திற்கு பிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த வன்முறையின் இரண்டு பெண் காவலர்கள், 19 ஆண் காவலர்கள், ஒரு என்எல்சி நிறுவனத்திற்கு பணியாற்றும் புகைப்பட கலைஞர் ஒருவர் என 22 பேர் காயமடைந்தனர். இவர்கள் என்எல்சி சொந்தமான மருத்துவ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு பழங்களை வழங்கி வழங்கினார். அப்போது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தனர்

போலீசார் கைது செய்த பிறகு வேனிலிருந்தவாறு செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் "நெய்வேலி என்.எல்.சி பிரச்சனை அனைவருக்குமான பிரச்சனை. மண்ணையும் மக்களையும் அழித்து மின்சாரம் எடுக்க வேண்டாம். தமிழகத்தின் உரிமை பிரச்சனை இது. என்.எல்.சி விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும். விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. இங்கு என்.எல்.சி தேவையேயில்லை. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் முற்றிலும் அழித்து விட்டது" என ஆவேசமாக கூறினார்.

போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி ராமதாஸ் மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சார்பில் சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2 மாதம் காத்திருக்க முடியாதா?; நெற்பயிர்கள் அழிப்பதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது: என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்த நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.