ETV Bharat / state

6 மணி நேரத்தில் சென்னை டூ கோவை.. சோதனையில் சீறிய வந்தே பாரத் ரயில்..

author img

By

Published : Mar 30, 2023, 3:48 PM IST

bharat
சென்னை

சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இன்று அதிகாலை சென்னையில் புறப்பட்ட வந்தே பாரத் ரயில் சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கோவை ரயில் நிலையத்தை அடைந்தது.

கோவை: இந்தியாவில் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில்கள் இயக்கப்படுகின்றன. முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த அதிவேக ரயில் சேவை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சென்னை - மைசூர் இடையில் வந்தே பாரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரண்டாவதாக, சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை கொண்டுவரப்படவுள்ளது. சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். தமிழ்நாட்டிற்குள்ளாக இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று(மார்ச்.30) காலை 5.30 மணி அளவில் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் காலை 11.18 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதில் சேலம் கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பயணித்து பரிசோதனை செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா, "சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இன்றைய சோதனை ஓட்டத்தில், ரயிலின் பயண நேரம் மற்றும் பராமரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 5.30 மணி அளவில் சென்னையிலிருந்து கிளம்பியது, காலை 11.18 மணியளவில் கோவை வந்தடைந்துள்ளது. பயண நேரம் 6 மணி நேரம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் ரயில் கோவை வந்தடைந்துள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததற்காக அனைத்து பணியாளர்களுக்கும் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 536 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பெட்டிகள் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. தென் மண்டல அளவில் இரண்டாவது ரயில் சேவை ஆகும். தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஆக இது உள்ளது. இதற்கான கட்டண விவரங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Trichy Metro: திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.