ETV Bharat / state

கோவையில் அதிகரிக்கும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல்.. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 7:16 AM IST

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிக்கை
கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிக்கை

Flu outbreak in Coimbatore: கோவையில் ‘ஃப்ளூ’ வைரஸ் காய்ச்சல் பரவுவதால், மக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதால், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஃப்ளு வைரஸ் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள, சில முன்னெச்சரிக்கை முறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாகக் காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக்கூடும்.

காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகக் காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

இக்காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில், சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும்.

இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.

வீட்டுக்கு வெளியே சென்று வந்தபிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும். வைட்டமின் சி, புரதச் சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறான தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். மேலும், காய்ச்சல் கண்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரை நாடி, உரிய அறிவுரைக்குப் பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற்று, அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால், மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "டாஸ்மாக் முடப்பட்டது இழப்பீடாக கருத முடியுமா?" - சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.