ETV Bharat / state

வில்லன் டூ ஹீரோ.. மனம் திருந்தி சாதுவாக வாழ்ந்து மறைந்த மக்னா யானை மூர்த்தியின் கதை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:31 PM IST

மறைந்த மக்னா யானை
மறைந்த மக்னா யானை

கேரளா மாநிலத்தையே புரட்டி போட்டு, தமிழ்நாட்டில் மனம்திருந்தி அனைவரின் மனம் கவர்ந்த மக்னா என்ற மூர்த்தி யானை உடல்நலம் குன்றி உயிரிழந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சமயத்தில் மக்னாவின் மனமாற்ற கதையை நம்மிடத்தில் நினைவு கொள்கிறார் வனக்கால்நடை மருத்துவர் அசோகன்.

மறைந்த மக்னா யானை

கோயம்புத்தூர்: 1990 கால கட்டங்களில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனையொட்டி உள்ள கேரள எல்லைப் பகுதியில் மக்கள் ஊருக்கு வெளியே நடமாடவே அச்சப்பட்டனர். எப்போது அந்த யானை வரும்? யாரைத் தாக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே பரவலாக நீடித்திருந்தது பயம். மக்களிடத்தில் இந்த பயம் வருவதற்கான காரணமாக அமைந்தது, மூர்க்க குணம் கொண்டிருந்த மக்னா யானையின் செயல். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 23 பேரைத் தாக்கி கொன்றதாகக் கூறப்படுகிறது.

மக்களைக் காப்பாற்றவும், மக்னா யானையில் ஆட்டத்திற்கு முடிவு கொண்டு வரவும் கேரள தலைமை வனப் பாதுகாவலர் 1998 ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். அதில், அந்த அட்டூழியம் செய்யும் மக்னா யானையைச் சுட்டுக்கொல்லக் கேரள தலைமை வனப் பாதுகாவலரின் ஒப்புதல் இருந்தது. யானையைச் சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது கேரள வனத்துறை.

அந்த சமயத்திலும் தன் மூர்க்க போக்கைக் கைவிடாத மக்னா, கேரளா பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை வனப்பகுதிக்குள் நுழைந்து 2 பேரை அடித்துக் கொன்றது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக வனத்துறையினர், மக்னாவை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடிவெடுக்கப்பட்டது. மக்னாவை மடக்கி பிடிக்க வனக்கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அடர்ந்த காட்டுக்குள் அடியெடுத்து வைத்தது. கேரளா மாநிலத்தில் ஆட்டம் காண்பித்த மக்னாவை வாச்சிக்கொலி என்ற இடத்தில் மயக்க ஊசி செலுத்தி வளைத்தது தமிழ்நாட்டு வன மருத்துவக் குழு.

மறைந்த மக்னா யானை
மறைந்த மக்னா யானை

உயிருக்கு ஆபத்தான நிலையில் பிடிபட்ட மக்னாவுக்கு வனக் கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது யானையின் உடலில் இருந்து, சுமார் 20 துப்பாக்கி குண்டுகள் வெளியேற்றப்பட்டன. குண்டுகள் துளைத்த காயங்களால் யானை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் கடும் துன்பத்தைச் சந்தித்து வந்தது. கடும் சிரமங்களுக்கு இடையே மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் மக்னா யானை உயிர் பிழைத்தது.

உயிர் பிழைத்த மக்னாவுக்கு உயிர் பயத்தினால் மாற்றம் கண்டதோ அல்லது தமிழ்நாட்டு வன மருத்துவக் குழுவின் பணிவு சிகிச்சையில் மனமாறியதோ தெரியவில்லை. தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் விடப்பட்ட மக்னா, அதன் மூர்க்க குணத்தை மாற்றிக் கொண்டு மிகவும் சாதுவான கும்கியாக வலம் வரத் தொடங்கியது. காட்டில் வாழ்ந்தவனுக்குத் தான் காட்டைப் பற்றி தெரியும் என்பதை நிரூபித்துக்காட்டியது மக்னா. மக்னா-வின் உயிரை காப்பாற்றியதில் பெரும்பங்கு வகித்த கால்நடை மருத்துவர் கிருஷ்ண மூர்த்தியைக் கௌரவிக்கும் விதமாக, மக்னாவிற்கு மூர்த்தி என பெயரிடப்பட்டது.

கேரளாவையே துவம்சம் செய்த மக்னா, தமிழ்நாட்டில் சாதுவாக மாறியது இயன்றளவிலும் புதிராகவே உள்ளது. முகாமில் தன்னை கவனித்துக் கொள்ளும் பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மீது அதீத அன்பைக் காட்டத் துவங்கியது மக்னா என்கின்ற மூர்த்தி(கும்கி). 25 ஆண்டுகளாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை மூர்த்திக்கு, கடந்த 2022 ஓய்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக வனக் கால்நடை மருத்துவர்கள் யானை மூர்த்திக்கு உயர் தர சிகிச்சை அளித்து வந்தனர்.

மூர்த்தியின் உடல்நலத்தைத் தேற்றச் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (அக்.14) காலை யானை மூர்த்தி திடீரென கீழே படுத்தது. தானாக எழுந்து நிற்க பலமுறை முயன்றும், முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. வனக் கால்நடை மருத்துவர்கள் யானையை எழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். எதுவும் பயனளிக்காத நிலையில், முகாமில் உள்ள சக கும்கி யானைகளின் உதவியை நாடியது மருத்துவக்குழு. ஆனால் அனைத்து முயற்சியும் தோல்வியையே சந்தித்தது.

இறுதிவரை எழுந்து நிற்கமுடியாத யானை மூர்த்தியின் உயிர் இரவு 9 மணியளவில் உடலைவிட்டுப் பிரிந்தது. சற்றும் எதிர்பாராத மூர்த்தியின் இறப்பு, வளர்த்த பாகன், அவரது குடும்பம், அப்பகுதி பழங்குடியின் மக்கள், வன ஊழியர்கள் ஆகியோரை பெரும் சோகத்திற்குத் தள்ளியது. அப்பகுதியில் கிராம மக்கள் ஒன்று கூடி கண்ணீருடன் நிறைவுபெற்றது மூர்த்தியின் இறுதி நிமிடங்கள். குறிப்பாக யானையுடன் விளையாடி அதனை பராமரித்த வந்த குழந்தைகள், மூர்த்தி யானையின் பாகனின் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் என அனைவரும் மூர்த்தியைக்கண்டு கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுத காட்சி, அப்பகுதி மக்களிடையே நீங்கா துயராக மாறியது.

உயிரிழந்த யானை மூர்த்திக்கு வனத்துறையின் மூலம் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நின்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் யானை மூர்த்தியின் உடல் உடற்கூராய்விற்குப் பின்னர், கணத்த இதயத்துடன் அதே பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த கால்நடை மருத்துவர் அசோகன், யானை மூர்த்தி உடனான நினைவுகளை ஈடிவி பாரத் செய்திகளுக்காகப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழக வனப் பகுதிக்குள் நுழைந்த கும்கி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு கிடைத்தது. துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்களுடன் தமிழக வனப்பகுதிக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மக்னா யானையை கடும் போராட்டத்திற்குப் பின் மயக்க ஊசி செலுத்தி பிடித்தோம்.

தொடர்ந்து வனப்பகுதியில் மழை பெய்ததால் யானையை வெளியே கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் யானை படுத்துக் கொண்டதால் கும்கி யானைகள் உதவியுடன் அதனை வனப்பகுதி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம், கடந்து சமதள பரப்புக்கு அழைத்து வந்தோம். பின்னர் அதற்குச் சிகிச்சை அளிக்க முயன்றபோது, அதன் உடல் முழுவதும் ஏராளமான துப்பாக்கிக் குண்டு காயங்களும் இருந்தது. தெப்பக்காடு யானைகள் முகாமில் மக்னா யானைக்குத் தொடர் சிகிச்சை அளித்தோம்.

அதன் காயங்கள் குணமடைவதற்கு சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் ஆனது‌. 23 பேரை கொன்ற அந்த மக்னா யானையை ஆட்கொல்லியாகத்தான் அங்கிருந்தவர்கள் பார்த்தனர். ஆனால் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது, அது ஒரு குழந்தையைப் போல் மாறியது. காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு தரும். அதனைப் பயன்படுத்தி அந்த யானைக்குச் சிகிச்சை அளித்தோம்.

உடல்நலம் தேறிய மக்னா என்ற மூர்த்தி யானையின் ஓய்வுக்குப் பின்னர், நன்றாக இருப்பதாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது அந்த யானை உயிருடன் இல்லை என்ற தகவல் என்னை புரட்டிப் போட்டுவிட்டது. அண்மையில் கூட அதனைப் பார்க்கச் சென்றபோது, என்னை அடையாளம் கண்டு கொண்டு பாசத்தை வெளிப்படுத்தியது. ஆட்கொல்லியாக இருந்த யானை ஒரு குழந்தையைப் போல மாறியதே அதன் சிறப்பு. மக்னா என்ற மூர்த்தியின் இழப்பு எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இழப்பு" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய.. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.