Isha Foundation: ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அழைப்பாணை - ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம்

author img

By

Published : Nov 24, 2021, 12:57 PM IST

Updated : Nov 25, 2021, 12:47 PM IST

isha yoga challenge

ஈஷா அறக்கட்டளைக்கு (Isha foundation) எதிராகத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய அழைப்பாணையை ரத்துசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து, புதிய அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு (Coimbatore Isha yoga foundation) எதிராகத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (Tamil Nadu State Commission for Protection of Child Rights) 2016ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக்கோரி ஈஷா யோகா மையத்தின் நிர்வாகி 2016ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஈஷா யோகா மையம் தரப்பில், குழந்தைகளின் வாழ்க்கை முறைக்குத் தேவையான ஆங்கிலம், கணிதம், அடிப்படை வேதம் ஆகியவற்றை குருகுல கல்வி மூலம் கற்பிப்பதாகவும், அர்ப்பணிப்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தங்கள் மையத்திற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு முன்னிலையாகும்படி ஆணையத்திலிருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும், அதை மதித்து குறிப்பிட்ட தேதியில் அனைத்து விவரங்கள், ஆதாரங்களுடன் விசாரணைக்கு முன்னிலையான நிலையில், தங்களை விசாரிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆணையத்தின் தரப்பில் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு, விசாரணையை முறையாக நடத்தாததால் நீதிமன்றத்தை நாடியதாகவும், அதனடிப்படையில் அழைப்பாணையை ரத்துசெய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

ஆணையம் தரப்பில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாகப் புகார்கள் வரும்போது அதில் அழைப்பாணை அனுப்பி விசாரிக்க அதிகாரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படும்போதும்; கேள்விக்குறியாகும்போதும் அதன் மீதான புகாரில் விசாரணை மேற்கொள்ளவும், தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கவும், அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும், அதுபோன்று அனுப்பப்படும் அழைப்பாணையை எதிர்த்துத் தொடரப்படும் வழக்குகளை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அழைப்பாணை அனுப்பும் அமைப்பிற்கு அதிகாரம் இல்லாதபட்சத்திலேயே வழக்குத் தொடர முடியும் எனவும் உத்தரவில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆணையம் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு அழைப்பாணை அனுப்பியதால் வழக்கு தொடர்ந்ததாக ஈஷா யோகா மையத்தின் தரப்பில் வாதிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நியாயமான, நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை ஆணையம் உறுதிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார். சட்டப்படி அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்துசெய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

அதேசமயம் புதிய தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு மீண்டும் நான்கு வாரங்களில் அழைப்பாணை அனுப்ப ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதற்கு உரிய ஆதாரங்களுடன் இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க ஈஷா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விளக்கங்களைப் பெற்ற பின் ஈஷா அறக்கட்டளைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: இந்த வருட யோகா தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது - ஜக்கி வாசுதேவ்

Last Updated :Nov 25, 2021, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.