ETV Bharat / state

குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி நீக்கம்.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 7:13 PM IST

kunnathoor panchayat council vice president sacked
குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி நீக்கம்

Kunnathoor Grama Panchayat Vice President Sacked: குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது முறைகேடு புகார் அளித்த துணைத் தலைவர், தற்போது அவர் மீது எழுந்த அடுக்கடுக்கான புகார்களை அடுத்து பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக கீதா தங்கராஜ் பதவி வகித்து வருகிறார். மேலும், துணைத் தலைவராக மூர்த்தி என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே ஓராண்டாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், போலியாக ரசீது அச்சடித்து பணம் வசூலிப்பதாகவும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும், துணைத் தலைவர் மூர்த்தி புகார் மனு அனுப்பி இருந்தார்.

அந்த வகையில், இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் கீதா, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தைக் கோவை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மூலம், கோவை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்ற கீதா, தற்போது காசோலைகளில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், துணைத்தலைவர் மூர்த்தி, தொழில் நிறுவனங்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் கமிஷன் கேட்பதாகவும், ஊராட்சி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், காசோலையில் கையெழுத்திட மறுப்பதாகவும் குற்றம் சாட்டி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிலர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனு அனுப்பி இருந்தனர்.

இதையும் படிங்க: கோவை முள் காட்டில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.. கழுகு பார்வை காட்சிகள் வெளியீடு!

இதைத் தொடர்ந்து, குன்னத்துார் ஊராட்சியில் இன்று (நவ.17) சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், துணைத் தலைவர் மூர்த்தியைப் பதவியிலிருந்து நீக்கியும், ஆறாவது வார்டு உறுப்பினர் கவிமாமணியைத் துணைத் தலைவராகத் தேர்வு செய்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில், இந்த தீர்மானம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவராக கவிதாமணி செயல்படுவார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சி துணைத் தலைவராக இருந்த மூர்த்தி கூறுகையில், தலைவர் மீது முறைகேடு புகார் கூறியதால் தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும், இதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சபரிமலை விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.. துளசிமணி மாலை அணிந்து சரண கோஷம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.