கன்னியாகுமரி: ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1வது நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் 1வது நாளான இன்று (நவ.17) ஐயப்ப பக்தர்கள் தங்களது விரதத்தைத் தொடங்கி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், குமார கோயில், வேளிமலை முருகன் கோயில், பார்வதி புரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களது குருசாமிகளிடம் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தைத் தொடங்கி உள்ளனர்.
இதனையடுத்து நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் மற்றும் நாகராஜா கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தும் “சாமியே சரணம் ஐயப்பா” என்று கோஷமிட்டுச் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தங்களது விரதத்தைத் தொடங்கி உள்ளனர்.
பொதுவாக, ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் நாள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்குவர். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் குளித்து தினமும் ஐயப்பனுக்குப் பூஜை செய்து, விரதம் இருந்து இருமுடி கட்டி சபரி மலைக்குச் சென்று வருவர். மாலை அணியும் பக்தர்கள் ஐயப்பனுக்கு உகந்த கருப்பு நிறம் அல்லது நீல நிறம் மற்றும் பச்சை நிறம் இவற்றில் ஏதாவது ஒரு நிற உடையை மட்டுமே அணிய வேண்டும்.
மேலும், புதிதாக மாலை அணியும் நபரை கன்னிசாமி என்று அழைப்பர். இந்த கன்னிசாமி எனப்படும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக 48 நாட்கள் விரதம் இருந்து தங்களது வீடுகளில் அல்லது கோயில்களில் கன்னி பூஜை நடத்தி இருமுடி கட்டி தான் சபரிமலைக்குச் செல்ல வேண்டும். அப்போது தான் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க:கோவை முள் காட்டில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.. கழுகு பார்வை காட்சிகள் வெளியீடு!