ETV Bharat / state

‘சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது’ - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Mar 2, 2023, 11:05 PM IST

Etv Bharat
Etv Bharat

22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளது என கோயம்புத்தூரில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கூட்டணி கட்சித்ஜ் தலைவர்கள், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி.

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள வெற்றிக்கு பிரதமருக்கு வாழ்த்துக்கள். இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. பணமழை பொழிந்துள்ளது. 22 மாதமாக சம்பாதித்த பணத்தை வைத்து தண்ணீர்போல் பணத்தை வாரி இறைத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

120 இடங்களில் வாக்காளர்களை டெண்ட் அமைத்து, பட்டியில் அடைத்து பணத்தை கொடுத்து, பல்வேறு பரிசு பொருள் கொடுத்து வெள்ளி கொலுசு, வாட்ச், குக்கர் ஆகியவற்றை வழங்கி வாக்காளர் வீடுகளுக்கு கோழிக்கறி கொடுத்து, மளிகை பொருட்கள் கொடுப்பதாக டோக்கன் வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் புகார் செய்தோம். ஆனால், தேர்தல் அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு, முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஜனநாயகப்படி நின்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.

அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வெற்றி பெற்றுள்ளார்கள். வாக்காளர் பெருமக்களை பட்டியில் அடைத்தது, ஒரு சில ஊடகங்களில் மட்டும் வந்தது. ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தால், வெற்றி பெற்றிருக்க முடியாது. 2021ஆம் ஆண்டில் 96,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலை வைத்து திமுக வெற்றி பெற்றதாக கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இந்த வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வி. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால், அதிமுக வெற்றி பெற்றிருக்கும். அண்ணாமலை அதிமுக குறித்து ஒன்றும் சொல்லவில்லை.
நான் பேட்டி பார்த்தேன், சொல்லவில்லை. இந்த தேர்தல் முழுக்க முழுக்க ஆட்சி அதிகாரம், பணபலம், பரிசு பொருட்கள் மூலம் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக பரிசுப் பொருள் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் ஆணையம் இருக்கிறதா, இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது. கரோனா தொற்று உள்ளிட்ட காலங்களில் ஏழை, எளிய மக்கள் வருமானம் இல்லாத சூழலில் இருந்தனர். இதை பயன்படுத்தி ஆசை வார்த்தைக் கூறி பரிசு பொருள் கொடுக்கிறோம் என வாக்கு பெற்றுள்ளனர். மக்கள் சுயமாக வாக்களிக்கவில்லை. தற்போது நடந்தது ஜனநாயப்க படுகொலை. இது பேராபத்து” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் வெற்றிக்கு திமுக செய்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.