ETV Bharat / state

ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் வெற்றிக்கு திமுக செய்தது என்ன?

author img

By

Published : Mar 2, 2023, 10:24 PM IST

Etv Bharat
Etv Bharat

ஈரோடு இடைத் தேர்தலில் 60 ஆயிரத்துக்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற திமுக செய்தது என்ன? என்பது குறித்து இந்த சிறப்புக்கட்டுரையில் காணலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நிலைக் குறைவு காரணமாக காலமானார். இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக இடைத்தேர்தலில் போட்டியிடாமல், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 1.70 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகின.

ஈரோட்டில் முகாம் அமைத்து பரப்புரை மேற்கொண்ட அமைச்சர்கள்: ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரைக்காக, திமுக தரப்பில் அமைச்சர்கள் உட்பட 32 தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், அனைத்து அமைச்சர்களும் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். சுமாராக 320 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்றும்; எந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை குறைகிறதோ அந்த தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் நிலைப்பாட்டால், அச்சத்திலும் அமைச்சர்கள் இருந்தது கவனத்தைப் பெற்றது.

பரிசு பொருட்கள்
பரிசு பொருட்கள்

வெள்ளி கொலுசு, கை கடிகாரம் பரிசு பொருட்கள் - மகிழ்ச்சியில் ஈரோடு மக்கள்: திமுக, அதிமுக என இரு பிரதானக்கட்சிகளும் மக்களுக்கு, வெள்ளி கொலுசு, கை கடிகாரம், குத்துவிளக்கு, வேட்டி சட்டை, உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கியதாகத் தெரிகிறது. மேலும் வாக்காளர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததாக, திமுக, காங்கிரஸ் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்களிடம் சத்திய வாக்கு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பல்வேறு முறைகேடுகளை செய்தது என அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திலும், தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடமும் நேரடியாக புகார் மனு அளிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அமைச்சரான பின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின்பு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் பரப்புரையில், மக்கள் கவனம் இருக்கும் வகையில் பரப்புரை மேற்கொண்டார். ஒற்றைச்செங்கல் வைத்து பரப்புரை மேற்கொள்வதை அவர் தவிர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று ஆட்சியைப் பிடிக்கும் காட்சியை புகைப்படமாக, இந்த இடைத்தேர்தலில் அவர் பரப்புரை மேற்கொண்டது அனைத்து மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

2021ஆம் ஆண்டில் காங்கிரஸ் பெற்ற வாக்கு: 2021ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 58 ஆயிரத்து 396 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜாவை 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

60ஆயிரத்துக்கு மேல்வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி தற்போது வரை காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து 10ஆயிரத்து 156 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 65ஆயிரத்து 575 வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச்.2) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரலாற்றில் பதிவாகக்கூடிய வகையில் ஒரு மாபெரும் வெற்றியை தேடித் தந்திருக்கிறார்.

அந்தத் தொகுதியினுடைய வாக்காளர் பெருமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி. இந்த இடைத்தேர்தல் பரப்புரையின்போது நான் தொடர்ந்து சொல்லி வந்தது, திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை தொடர்ந்து எடுத்து வைத்தேன். திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்போடு நடத்திட வேண்டும் என்று மக்கள் இந்த மிகப்பெரிய ஆதரவை இந்த இடைத்தேர்தலில் வழங்கியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரைக்கும் தன்னையே மறந்து ஒரு நான்காம்தர பேச்சாளரைப்போல் பேசிய பேச்சுக்கு, இந்த இடைத்தேர்தல் மூலமாக அந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இருபது மாத கால திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஒரு அங்கீகாரம் தர வேண்டும்.

இந்தத் தேர்தலை இடைத்தேர்தலாக மட்டுமல்லாமல், இந்த ஆட்சியை எடைபோட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பாருங்கள் என்று நான் தொடர்ந்து பரப்புரையில் எடுத்துச் சொன்னேன். ஆகவே, மக்கள் ஒரு நல்ல எடைபோட்டு இந்த ஆட்சிக்கு மேலும் வலுசேர்க்கின்ற வகையில் ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

விரைவில் நாம் சந்திக்கவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. அந்தத் தொகுதி மக்கள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே, இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, எடைத்தேர்தலாக பாருங்கள், இந்த இடைத்தேர்தலில் நல்ல மதிப்பெண்களை வழங்கியிருக்கிறார்கள். வர இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், இதைவிட மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாக வழங்குவார்கள்.

நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன், அதில் எந்த மாற்றமும் கிடையாது. யார் வெற்றி பெற்று, யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட, யார் பிரதமராக இருக்கக்கூடாது, யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் இப்போதைக்கு எங்களுடைய கொள்கை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெற்றிக்கு உதவாத இரட்டை இலை; தோல்விக்கான காரணம் - அதிமுகவில் அடுத்த மூவ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.