ETV Bharat / state

இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு - வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த கோவை மருத்துவர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 9:24 AM IST

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூரில் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்ற வட மாநில தொழிலாளியின் குழந்தைக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி பொள்ளாச்சி சிஞ்சிவாடி பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளி, தனது மூன்று வயது குழந்தையுடன் சென்றார். இயந்திரத்திற்குள் கையை விட்ட நிலையில் அந்த குழந்தையின் கட்டை விரல் இரண்டு துண்டாகிவிட்டது.

இச்சம்பவம் நடந்து ஒன்றரை மணி நேரம் கழித்து தொழிலாளி தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மேலும், துண்டான விரலை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மீராவுக்கு தகவல் தெரிவித்தது.

இந்த அறுவை சிகிச்சை பல மணி நேரம் ஆகும் என்பதால் மயக்க மருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர், அறுவை அரங்க ஊழியர்கள் போன்ற குழுவை உடனடியாக தயார் செய்யப்பட்டு தேவையான ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே போன்றவை உடனடியாக எடுக்கப்பட்டன.

அறுவை அரங்கு தயாரான நிலையில், இந்த அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டி இருந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா தலைமையில் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் கார்த்திகேயன், ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சங்கமித்ரா ஆகியோர் சுமார் எட்டு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை தொடர்ச்சியாக செய்தனர்.

அவர்களுடன் அறுவை சிகிச்சை துறை பட்ட மேற்படிப்பு மாணவி மருத்துவர் மணிமேகலையும் இருந்தார். இவருடன் மற்ற துறையை சார்ந்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்தனர். மயக்க மருந்து நிபுணர்கள் மருத்துவர் அருள் மணி மற்றும் மருத்துவர் கிருத்திகா இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்கள்.

எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இசக்கி முருகன் குழந்தைகள் நல மருத்துவர்கள் மருத்துவர் சிவசங்கர் மற்றும் மருத்துவர் அமுதா மற்றும் செவிலியர் செல்வி மற்றும் ஜெயலலிதா இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள். முதலில் கே ஒயர் மூலம் விரலை இணைத்து இதற்குப் பின் ரத்தக் குழாய்கள் இணைக்கப்பட்டன.

அறுவை சிகிச்சை முடிவில் விரலுக்கு ரத்த ஓட்டம் வருவது உறுதிசெய்யப்பட்டு, குழந்தை அறுவை சிகிச்சை பகுதியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் கட்டைவிரல் எப்படி நல்ல நிலைக்கு திரும்புகிறது என்று மூன்று நாள் மற்றும் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும் தற்போது குழந்தை நல்ல நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கண் அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தும் மைக்ரோஸ்கோப் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை தேசிய கை அறுவை சிகிச்சை தினமான கடந்த 23ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை முதல்முறையாக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அடிபட்ட இடத்திற்கு தோல், தசை அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Thoothukudi news: தாமிரபரணி அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறைக்கப்படும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.