ETV Bharat / state

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம்; கொள்ளை அடிக்கப்பட்டதில் 95% நகைகள் மீட்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 6:09 PM IST

deputy commissioner said 95 percent looted jewelry recovered in Coimbatore Joyalukkas robbery incident
மாநகர துணை காவல் ஆணையர் நந்தீஷ் பேட்டி

Joy alukkas looted jewelry recovered: கோயம்புத்தூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 95% மீட்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விஜயை தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தேடி வருவதாகவும் மாநகர துணை காவல் ஆணையர் நந்தீஷ் தெரிவித்துள்ளார்.

மாநகர துணை காவல் ஆணையர் நந்தீஷ் பேட்டி

கோயம்புத்தூர்: கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி கோயம்புத்தூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கோவை காந்திபுரத்தில் 28ஆம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் விஜய் என்பவர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. விஜய் மீது ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளது. விஜய் மனைவி நர்மதா என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

நேற்று விஜய் மாமியார் யோகராணி தர்மபுரி மாவட்டம் தும்பலஹல்லியில் இலங்கை அகதிகள் முகாமில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 300 முதல் 400 கிராம் மட்டும் நகைகள் மீட்கப்பட வேண்டி இருக்கின்றது. 5 தனிப்படை காவல்துறை தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டு நகைகளை மீட்டுள்ளனர்.

கொள்ளை போன நகைகளில் 95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. விஜயை தேடி வருகின்றோம். இரண்டு மூன்று நாட்களில் பிடித்து விடுவோம். மொத்தம் 4.8 கிலோ நகைகள் திருடப்பட்டு இருக்கின்றது. நகைக்கடையில் இருந்த சின்ன ஓட்டையைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து திருடி இருக்கின்றார். வெளியிலிருந்து இந்த திருட்டிற்கு யார் உதவி செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றோம்.

விஜய்யைப் பிடித்தால் மட்டுமே அந்த நபர் யார் என்பது தெரிய வரும். 2 அடி ஓட்டை மட்டுமே நகைக்கடையிலிருந்தது. அது குறித்துத் தெரிந்த நபர்கள், சிறையில் இருந்த நபர்கள் யாராவது இந்த கொள்ளைக்கு உதவினார்களா என விசாரிக்கின்றோம். விஜய் மீது ஏற்கனவே சிறிய திருட்டு வழக்குகள் மட்டுமே இருக்கின்றது.

தும்பலஹல்லி இலங்கை அகதிகள் முகாமில் வைர நகைகளைக் குப்பை மற்றும் குழிதோண்டிப் புதைத்து வைத்து இருந்தார்கள். திருடிய நகைகளை கவரில் போட்டு புதர்களுக்குள் மறைத்து வைத்திருந்தனர், அதைப் பறிமுதல் செய்து இருக்கின்றோம். நகைகளைத் திருடிய பின் என்ன செய்வது என வேறு திட்டம் ஏதாவது போட்டு இருக்கலாம்.

ஆனைமலையில் அவர் தப்பி ஓடிவிட்டதாகவும், ஓடிப்போகாமலிருந்தால் விஜயின் முழுமையான திட்டம் தெரிந்து இருக்கும் எனவும் தெரிவித்தார். நகை கொள்ளைக்கு வெளிநபர்கள் தொடர்பு கட்டாயம் இருக்கும். தனிப்படை காவல்துறை கர்நாடகா, கேரளா, மதுரை, ஆனைமலை, கோவை ஆகிய பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்தார். இலங்கை அகதிகள் முகாமிலிருந்து நர்மதா எப்படி வெளியில் சென்றார் என்பது குறித்து கியூ பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்றம்பள்ளி அருகே சூப்பர் மார்க்கெட்டில் திருடிய நபருக்கு தர்ம அடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.