ETV Bharat / state

திமுக அரசு அமைத்துள்ள 38 குழுக்களை கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கலாம்.. ஈபிஎஸ் கடும் தாக்கு

author img

By

Published : Aug 25, 2022, 7:37 AM IST

திமுக அரசு அமைத்துள்ள 38 குழுக்களை கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும்.. ஈபிஎஸ் கடும் தாக்கு
திமுக அரசு அமைத்துள்ள 38 குழுக்களை கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும்.. ஈபிஎஸ் கடும் தாக்கு

திமுக அரசு அமைத்துள்ள 38 குழுக்களை கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் : அதிமுக பிரமுகர் செந்தில்கார்த்திகேயனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ், “ஜெயலலிதாவின் ஆட்சி இருக்கும்பொழுது கோவை மாவட்டத்திற்கும், மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும் ரத்து செய்வதுமாக உள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500 க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து செய்துள்ளது. திமுக ஆட்சியில் 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால், எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனையும் இந்த அரசு கைவிட இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட், எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதால், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அதிக விலை போகும் என்பதால்தான் பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கான காரணம்.

இதனால் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். மெட்ரோ ரயில் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எந்த திட்டத்தையும் இவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை. மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகள், எனது ஆட்சியில் வேகமாக செயல்பட்டு வந்தது.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

பின்னர் ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கியுள்ளது. ஆனைமலை நல்லாறு திட்டமும் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது.

மின்கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும்பொழுது கூறிய பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம், முதியோர் ஓய்வூதிய உயர்வு, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளது.

திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுகிறது. இதனால் இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரத்தை படைத்துள்ளனர். ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும். தற்பொழுது சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யாமல் உள்ளனர். சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் அரசாக இந்த அரசு உள்ளது. இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள். இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய ஈபிஎஸ், “அவரை நம்பி அதிமுக கட்சி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பிதான் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆறுகுட்டி அதிமுகவில் இருந்தார். தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளார். தொண்டர்கள், சாதாரண மக்கள் உட்பட அனைவரும் என்னை வந்து சந்திக்கலாம். ஸ்டாலின் யாரை சந்திக்கிறார். டிடிவி தினகரன் அமலாக்கத்துறையில் இருந்து முதலில் அவரை காப்பாற்றி கொள்ளட்டும்.” என கூறினார்.

இதையும் படிங்க: சொந்தக்கட்சியின் அதிகாரப்போட்டியை மறைக்க திமுகவை விமர்சிக்கின்றனர்... முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.